அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 5 உதவிப் பேராசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 2,708 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நிரப்ப அனுமதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பிட ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த ஆண்டு அக்.16ல் அறிவிக்கை வெளியிடப்பட்டது.
ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கையின்படி, பணிநாடு நர்களால் இணைய வழி வாயிலாக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 61 பாடப் பிரிவுகளுக்கான 2,708 பணியிடங்களுக்கு விண் ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எழுத்துத் தேர்வு - கடந்தாண்டு டிசம்பரில் நடத்தப்பட்டது. இதில், முதல் கட்டமாக வரலாறு கல்வியியல், மனித உரிமைகள், கடல் உயிரியல், வனவிலங்கு உயிரியல் ஆகிய 4 பாடப் பிரிவுகளுக்கு மட்டும் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.
தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் சரி பார்ப்பு மற்றும் நேர்காணல் பணிகள் நிறைவு பெற்று, பணி நாடுநர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் நான்கு பாடப் பிரிவுகளில் 5 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன். தலைமைச் செயலர் முருகானந்தம், உயர்கல்வித் துறை செயலர் பொ.சங்கர். கல்லூரிக் கல்வி ஆணையர் எ.சுந்தரவல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.