முதல்வர் ஸ்டாலின்
சென்னை: வணிக எரிவாயு விலை உயர்வு ஏற்படுத்தும் தாக்கங்களை உணர்ந்து, அதனை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்: ”மக்களின் துயரை எண்ணிப் பார்த்து தீர்வு காணுங்கள்!. தேர்தலுக்கு முன்பே கணித்தது போல், தேர்தல் முடிந்தவுடன் எரிவாயு விலையை உயர்த்தியிருக்கிறது மத்திய பாஜக அரசு.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, அதன் பலனை மக்களுக்கு அளிக்கவில்லை. இப்போது மேற்கு ஆசிய போர் என்ற நெருக்கடியை வைத்து, மக்களின் நலனை எண்ணாமல், விலையை ஏற்றுவது சரியல்ல.
இந்த எரிவாயு விலை உயர்வு ஏற்படுத்தும் தாக்கங்களை உணர்ந்து, இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்.” என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.