தமிழகம்

“கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை...” - நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் பதிலடி

மு.சக்தி

சென்னை: “நெல் சாகுபடிக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டாம் என்று தமிழகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது,” என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது திசை திருப்பும் செயல் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டி இருந்தார். இந்நிலையில்,“தங்கள் அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை. அப்படி, பேசவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. தங்களது கூற்று உண்மைதானென்றால், அந்தக் கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா?,” என்று நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நெல்லுக்குத் தமிழக அரசு வழங்கும் ஊக்கத் தொகையால் விளைச்சல் பெருகிக் கொண்டே போகிறது. எனவே, இந்த ஊக்கத் தொகையை நிறுத்த வேண்டும்” எனத் தமிழக அரசு தலைமைச் செயலாளருக்குத் தங்களின் அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் மிகத் தெளிவாகவே உள்ளது.

          

கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை. அப்படி, பேச வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், தற்போது மாநில அரசால் தரப்படும் ஊக்கத் தொகையை மறு பரிசீலனை செய்யுமாறும், நெல்லுக்கு இத்தகைய ஊக்கத் தொகை வழங்குவதை நிறுவத்துவது தொடர்பாகப் பரிசீலனை செய்யவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.

தங்களுடைய இந்தப் பதிவில், "குறைந்தபட்ச ஆதார விலையைத் தாண்டி ஊக்கத் தொகை வழங்குவது மாநில அரசின் முடிவு எனவும், அதனை யாரும் பறிக்கவில்லை" என்றும் கூறியிருக்கிறீர்கள். தங்களது கூற்று உண்மைதான் என்றால், அந்தக் கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா ?” என்று முதல்வர் சவால் விடுத்துள்ளார்.

முன்னதாக, “நெல் சாகுபடிக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு தமிழகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பான, அரசியல் உள் நோக்கம் கொண்ட, தமிழக விவசாயிகளை திசை திருப்பும் நோக்கில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு திரிபு,” என்று நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT