தமிழகம்

“தமிழ்நாடு முழுக்க இதைத்தான் பேசுகிறார்கள்” - ரூ.8,000 கூப்பன் பற்றி ஸ்டாலின் பெருமிதம்

செய்திப்பிரிவு

“இல்லத்தரசி திட்டத்தில் ரூ. 8,000-க்கு கூப்பன் வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு முழுக்க இத்திட்டத்தைப் பற்றித்தான் அனைவரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்’’ என நாகர்கோவில் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

          

நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. நாகர்கோவில் தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின், கன்னியாகுமரி திமுக வேட்பாளர் மகேஷ், பத்மநாபபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்லசுவாமி, விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் பிரவின், கிள்ளியூர் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார், குளச்சல் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் ஆகியோரை அறிமுகப்படுத்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: வரும் தேர்தலில் திமுக-வை 7-வது முறையாக ஆட்சியில் அமர்த்த நீங்க ரெடியா?

திருவாரூர், திருச்சி, கரூர், ஈரோடு, கோவை, நெல்லை ஆகிய ஊர்களில் பரப்புரையை முடித்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். அவர்கள் தயாராகிவிட்டார்கள். 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டுமானால், குமரி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும்.

திமுக தேர்தல் அறிக்கைதான் இந்த தேர்தல் களத்தின் சூப்பர் ஸ்டார். ஒரு கோடியே 31 லட்சம் சகோதரிகள் பெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இனி ரூ. 2,000 ஆக வழங்கப்படும். புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு உதவித்தொகை இனி ரூ. 1,000-த்திலிருந்து மாதம் ரூ. 1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். இல்லத்தரசி திட்டத்தில் ரூ. 8,000-க்கு கூப்பன் வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு முழுக்க இத்திட்டத்தைப் பற்றித்தான் அனைவரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

மீன்பிடித் தடைக்கால சிறப்பு நிவாரணத் தொகை மாதம் ரூ. 8,000-ல் இருந்து ரூ. 12,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். மீன்பிடி குறைவுகால நிவாரணத் தொகை மாதம் ரூ. 6,000-ல் இருந்து ரூ. 9,000 ஆக வழங்கப்படும். மீனவர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கைக்கான வயது வரம்பு 65-லிருந்து 70 வயதாக உயர்த்தப்படும். 75 வயது வரை மாத ஓய்வூதியம் வழங்கப்படும்.

சிறுபான்மையின மக்களை, குறிப்பாக கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களைக் குறிவைத்து, வெளிநாட்டு நிதிப் பங்களிப்புச் சட்டத் திருத்த மசோதா (எப்சிஆர்ஏ) கொண்டு வரப்பட்டுள்ளது. இதை எதிர்த்து முதன்முதலாக குரல் கொடுத்திருக்கிறேன். பழனிசாமி அவர்களே! இதில், அதிமுகவின் நிலைப்பாடு என்ன? இந்த சட்டத் திருத்தத்தை பழனிசாமி ஆதரிக்கிறாரா? அல்லது குடியுரிமை திருத்தச் சட்டம், வக்பு சட்டத் திருத்தத்தில் முஸ்லிம்களுக்கு துரோகம் செய்த மாதிரியே, அடுத்து கிறிஸ்தவ மக்களுக்குத் துரோகம் பண்ணத் தயாராகி விட்டீர்களா?

இந்திய துணைக்கண்டம் குமரியிலிருந்துதான் தொடங்குகிறது. இங்கிருந்தே திராவிட மாடல் 2.0-க்கான வெற்றியும் தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT