படம்: நா.தங்கரத்தினம்
அமைதி, வளர்ச்சியை முன்னிறுத்தும் தமிழ்நாட்டின் டிஎன்ஏ-வை மாற்ற நினைத்து சொந்த மண்ணுக்கும், சொந்த மக்களுக்கும் துரோகம் இழைக்கும் கூட்டணியாக என்டிஏ (தேசிய ஜனநாயகக் கூட்டணி) உள்ளது என்று மதுரையில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
மதுரை மாவட்ட திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் திருமங்கலத்தில் நேற்று நடைபெற்றது. திமுக வேட்பாளர்கள் பி.மூர்த்தி (மதுரை கிழக்கு), பழனிவேல் தியாகராஜன் (மத்தி), கோ.தளபதி (வடக்கு), மணிமாறன் (திருமங்கலம்), ரகுபாலாஜி (மேற்கு), வெங்கடேசன் (சோழவந்தான்), கிருத்திகா தங்கப்பாண்டி (திருப்பரங்குன்றம்), மதிமுக வேட்பாளர் பூமிநாதன் (தெற்கு), காங்கிரஸ் வேட்பாளர்கள் சரவணகுமார் (உசிலம்பட்டி), மேலூர் தொகுதிக்கு நேற்று காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட விஸ்வநாதன் ஆகியோரை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.
கூட்டத்தில், மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் படித்து 24 பேர் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்பட்டுள்ளது.
மேலமடையில் வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம், கோரிப்பாளையத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மேம்பாலம், திருமங்கலம் - கள்ளிக்குடி வீரபாண்டிய கட்டபொம்மன் மேம்பாலம், உலகத் தரத்தில் ஹாக்கி விளையாட்டு அரங்கம், புனரமைக்கப்பட்ட வண்டியூர் பூங்கா, வைகை வடகரைச் சாலை மேம்பாடு, சிட்கோ தொழிற்பூங்கா,குடிநீர்த் திட்டம், ஒரு லட்சத்துக்கு 22 ஆயிரம் பேருக்கு இ-பட்டா வழங்கல், செல்லூர் கண்மாய் முதல் வைகை ஆறு வரை சிமென்ட் கால்வாய் அமைக்கும் பணிகளை நிறைவேற்றியுள்ளோம்.
மதுரைக்கான வளர்ச்சியை முன்னெடுக்கும் மாடல் தான் திராவிட மாடல். ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்வைப்பது வளர்ச்சியை கெடுக்கும், மத நல்லிணக்கத்தை பாதிக்கும் ஆரிய மாடல். மதுரை மக்கள் புத்திசாலிகள். இங்கு கலவரத்தை தூண்ட நினைத்தவர்களின் சதியை சிறப்பாக முறியடித்தீர்கள்.
அமைதி, வளர்ச்சியை முன்னிறுத்தும் தமிழ்நாட்டின் டிஎன்ஏ-வை மாற்ற நினைத்து சொந்த மண்ணுக்கும், சொந்த மக்களுக்கும் துரோகம் இழைக்கும் கூட்டணியாக என்டிஏ உள்ளது. இவர்கள் தான் டபுள் இன்ஜின் என்ற டப்பா இன்ஜின் அரசை தமிழ்நாட்டில் அமைக்க துடிக்கிறார்கள். நாட்டிலேயே அதிக திட்டங்களை தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசு தான் செயல்படுத்துகிறது.
இது தெரிந்தும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் எதுவும் தெரியாததுபோல் பேசியுள்ளார். தமிழ்நாட்டில் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. அரசின் பணம் எங்கு போகிறது? கடன் சுமை அதிகரித்துள்ளது. தமிழ்நாடு திவாலாகப் போகிறது என எந்த புரிதலும் இல்லாமல் பேசியுள்ளார். தமிழக அரசின் பணம் மக்களுக்கு தான் போகிறது.
நான் பியூஷ் கோயலுக்கு சவால் விடுகிறேன். தமிழ்நாடு மத்திய அரசுக்கு தரும் ரூ.1-க்கு பதில் எவ்வளவு திரும்பக் கிடைக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு எவ்வளவு வழங்கப்படுகிறது. இந்த ஒப்பீட்டை வெளிப்படையாக அறிவிக்க முடியுமா? சொன்னால் உங்கள் குட்டு உடைந்துவிடும். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு வழங்கும் அதே மாதிரியான வரி பகிர்வை தமிழ்நாட்டுக்கு வழங்கினால் தமிழ்நாட்டின் மொத்த கடனும் அடைந்து நிதி நெருக்கடியே இருக்காது.
எங்கள் பணத்தை வாங்கிக் கொண்டு,பணம் எங்கே என்று கேட்பது நியாயமா? தமிழ்நாட்டை பார்த்து திவாலாகப் போகிறது என்று பியூஷ் கோயல் கூறியுள்ளார். பார்த்துக்கொண்டே இருங்கள் என்டிஏ தான் திவாலாக போகிறது. இவ்வாறு அவர் பேசினார். அமைச்சர் தங்கம் தென்னரசு, எம்பிக்கள் சு.வெங்கடேசன், தங்க தமிழ்ச்செல்வன் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், மக்கள் விடுதலை கட்சி தலைவர் முருகவேல்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.