அண்ணா அறிவாலயத்தில், கட்சி நிர்வாகிகளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னை: தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது 73-வது பிறந்தநாளை நேற்று உற்சாகமாகக் கொண்டாடினார். குடும்பத்தினர், அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், முக்கிய தலைவர்கள், லட்சக்கணக்கான தொண்டர்களின் வாழ்த்து மழையில் நனைந்தார்.
முதல்வர் ஸ்டாலினின் 73-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அதிகாலையிலேயே தொடங்கின. முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
குடும்பத்தினர் முன்னிலையில் முதல்வர் கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் மற்றும் பேரக்குழந்தைகள் உடனிருந்து வாழ்த்தினர். இதனைத் தொடர்ந்து துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் சந்தித்து வாழ்த்துக் கூறினர்.
பின்னர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் அவருக்கு புத்தகங்களை வழங்கி வாழ்த்தினர். பிறகு நினைவிடப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். பின்னர் வேப்பேரி பெரியார் திடலுக்குச் சென்ற முதல்வரை, திராவிடர் கழகத் தலைவர் வீரமணி வரவேற்றுப் புத்தகம் வழங்கினார். அங்கு பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதல்வர் வணங்கினார்.
அதன்பிறகு, கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்ற முதல்வர், அங்குள்ள கருணாநிதி படத்துக்கு மலர் தூவி வணங்கினார். தாயார் தயாளு அம்மாளிடம்ஆசி பெற்றார். பின்னர் சிஐடி காலனி இல்லம் சென்ற அவரை சகோதரி கனிமொழி எம்.பி. வரவேற்றார்.
அங்கு ராஜாத்தி அம்மாளிடம் வாழ்த்துப் பெற்றதோடு, கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்தினார். அதன்பிறகு திமுக தலைமை அலுவலகம் சென்ற முதல்வருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடிக்கத்தொண்டர்கள் விண்ணதிர முழக்கமிட்டு அவரை வரவேற்றனர்.
மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் முதல்வர் பிரம்மாண்ட கேக் வெட்டினார். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரிசையில் நின்று மாலைகள், பொன்னாடைகள், புத்தகங்கள், பூக்கூடைகளை வழங்கி தங்களது அன்பை வெளிப்படுத்தினர். மேலும் கூட்டணி கட்சியினரும் முதல்வரை சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இவர்கள் தவிர குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி கடிதம் மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததோடு தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்தினர்.
திரவுபதி முர்மு: கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் அளித்து இன்னும் பல ஆண்டுகள் தேசத்துக்கு தொடர்ந்து அர்ப்பணிப்புடன் சேவை செய்ய அருள்புரிவாராக.
பிரதமர் மோடி: நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி: நல்ல ஆரோக்கியம், வலிமை, நீண்ட ஆயுள் பெற்று தமிழக மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்ய வேண்டும்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: நல்ல ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ பிரார்த்திக்கிறேன்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு: மக்களுக்குச் சேவை செய்வதற்காக அர்ப்பணிப்புடன் நீண்ட ஆயுள் பெற பிரார்த்திக்கிறேன்.
கேரளம் முதல்வர் பினராயி விஜயன்: நாட்டின் ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற நெறிமுறைகளைப் பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராகப் பாதுகாப்பதில் நீங்கள் கொண்டுள்ள உறுதியை நான் வணங்குகிறேன். நமது நாட்டை வரையறுக்கும் அரசியல் அமைப்பு விழுமியங்களை நிலைநிறுத்த நாம் ஒன்றிணைந்து நிற்கும் வேளையில் இந்த ஆண்டு உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் மக்களுக்குச் சேவை செய்வதில் தொடர்ச்சியான வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன்.
இதேபோல் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், நடிகர் ரஜினிகாந்த், விசிக தலைவர் திருமாவளவன், தேமுதிக பொருளாளர் சுதீஷ், கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, ஆம் ஆத்மி மாநில தலைவர் வசீகரன், தவாக தலைவர் வேல்முருகன், மநீம தலைவர் கமல்ஹாசன், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், பாமக தலைவர் அன்புமணி, முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.