டெல்லி குடும்பத்தின் ATM ஆக புதுச்சேரியை பயன்படுத்தியது காங்கிரஸ் - மோடி குற்றச்சாட்டு

டெல்லி குடும்பத்தின் ATM ஆக புதுச்சேரியை பயன்படுத்தியது காங்கிரஸ் - மோடி குற்றச்சாட்டு
Updated on
2 min read

புதுச்சேரி: காங்கிரஸ் புதுச்சேரியை டெல்லியில் உள்ள தனிப்பட்ட குடும்பத்தின் ஏடிஎம் போல பயன்படுத்தியது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.

அரசு முறைப் பயணமாக இன்று புதுச்சேரிக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் நடைபெற்ற விழாவில் புதுவைக்கான உள்கட்டமைப்பு, நகர்ப்புற சேவைகள், தொழில்துறை மேம்பாடு, கல்வி, சுகாதாரம் மற்றும் நிலையான வளர்ச்சியை வலுப்படுத்தும் ரூ.1,572 கோடி மதிப்பிலான 74 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும் ரூ.1,142 கோடி மதிப்பில் 19 திட்டங்களை தொடங்கி வைத்தார். ஒட்டுமொத்தமாக பிரதமர் மோடி, ரூ.2,714 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர், "புதுவைக்கு கடந்த முறை வந்த போது பெஸ்ட் புதுவை என்ற தாரக மந்திரத்தைக் கூறினேன். தொழில், கல்வி, ஆன்மிகம், சுற்றுலா, ஆகியவற்றில் புதுச்சேரியை வளர்ச்சி பெறச்செய்வோம் என கூறினோம். பெஸ்ட் புதுவை ஆக்குவோம் என உறுதி கூறினோம்.

கடந்த நான்கரை ஆண்டுகளில் பெஸ்ட் புதுவைக்காக சிறப்பான பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். தேசிய ஜனநாயக கூட்டணியால் நல்ல ஆட்சி வழங்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் எப்படி வளர்ச்சி பெற முடியும் என்பதற்கு புதுவை ஒரு உதாரணமாக உள்ளது. அதனால்தான் புதுவையில் முடிவுகள் விரைவாக எடுக்கப்பட்டு, நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது.

தனிநபர் வருமானத்தில் பெரிய வளர்ச்சியை புதுச்சேரி கண்டு இருக்கின்றது. அதிலும் நாட்டிலேயே சமூக குறியீட்டு மதிப்பெண்ணில் புதுச்சேரி முன்னேறிக்கொண்டு இருக்கின்றது.

இரட்டை இன்ஜின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு புதுவையின் வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் கொடுக்கும் வகையில் கிழக்கு கடற்கரை சாலை, ஜிஎஸ்டி சாலை இணைப்பை எளிதாக்கியுள்ளது. சென்னைக்கு ஒன்றரை அல்லது 2 மணி நேரத்தில் புதுவையிலிருந்து செல்ல சென்னை, பெங்களூரு, கோவை போன்ற பொருளாதார மையங்களுடன் புதுவையை இணைத்துள்ளோம். இதனால் புதுவையின் பொருளாதாரம் மேம்படும். புதுவையின் சுற்றுலா, வர்த்தகம், தொழில்துறையை சாலைமேம்பாடு உயர்த்தும்.

ஆன்மிகம், சுற்றுச்சூழல், சுகாதார சுற்றுலா முதலீடுகள் மூலம் புதுவையின் சுற்றுலா வளர்ச்சியை புதிய உச்சத்துக்கு எடுத்துச் செல்வோம். பல்வேறு கோயில்களுக்கு புனித யாத்திரை வசதி செய்யப்படும்.

இரட்டை இன்ஜின் ஆட்சியால் செய்யப்படும் பணிகளைக் கொண்டாடுவது முக்கியம். அதேநேரத்தில் கடந்த ஆட்சியில் என்ன மோசமான நிகழ்வுகள் நடந்தன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். காங்கிரஸ், திமுக ஆட்சியில் புதுவை மக்கள் எப்படி பாதிக்கப்பட்டார்கள்? கடினமான அந்த ஆண்டுகளில் அரசியல் ஸ்திரத்தன்மை இன்றி, ஊழல்கள் பெருகி, குற்றங்கள் அதிகமாகி, ஏழைகள் துன்பப்பட்டனர்.

ரேஷன் கடைகளில் அரிசி இல்லை, சம்பளம் கிடைக்கவில்லை, போதைப்பொருள் மாபியாக்களும், குண்டர்களும் அச்சமின்றி தெருவில் நடமாடினர். மிக மோசமான, மக்களைப்பற்றி கவலையில்லாத அந்த காலத்தை நாம் மறந்துவிடக்கூடாது.

காங்கிரஸ், புதுவையை டெல்லியில் உள்ள தனிப்பட்ட குடும்பத்தின் ஏடிஎம் போல பயன்படுத்தியது. தமிழகத்தில் திமுக ஆட்சியில் தொடர் மோசடிகள், ஊழல்கள் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. காங்கிரசும், திமுகவும் புதுவையின் வளர்ச்சிப் பயணத்தை தடுக்கும் வேகத்தடையாக இருந்துள்ளனர். புதுவை வளர்ச்சியை தடுத்த அதே சக்திகள் மீண்டும் அதிகாரத்துக்கு வர ஏங்கிக்கொண்டிருக்கின்றனர்.

ஊழல் உள்பட பல்வேறு குற்ற செயல்கள் புரிந்த அந்த கட்சிகள் மீண்டும் புதுவைக்கு வர வேண்டுமா? புதுவை மக்கள் அதை விரும்பமாட்டார்கள் என நம்புகிறேன்.

புதுவையின் இரட்டை இன்ஜின் அரசு இந்த பணியில் உங்களுடன் இணைந்து பணியாற்றும். பெஸ்ட் புதுவைக்காக நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்" என தெரிவித்தார்.

விழாவில், முதல்வர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரசு நிகழ்வில் தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து, வந்தே மாதரம் ஆகியவை இசைக்கப்படவில்லை.

டெல்லி குடும்பத்தின் ATM ஆக புதுச்சேரியை பயன்படுத்தியது காங்கிரஸ் - மோடி குற்றச்சாட்டு
முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in