சென்னையில் நேற்று நடந்த உலக மகளிர் உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் மகளிருக்கு தொழில் கடன்களை வழங்கினார். இதில், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்ட உயர் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
சென்னை: தமிழகத்தில் ஒவ்வொரு பெண்ணும் கல்வி பயில, தொழில் முனைவோராக மாற, எந்தவித அச்சமும் இல்லாமல் சுதந்திரமாக வாழக்கூடிய கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகத்தில் பெண்கள் பணியிடப் பங்கேற்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு (டிஎன்டபிள்யு-சேஃப்) எனும் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டம் உலக வங்கியின் ரூ.1,185 கோடி நிதி உதவியுடன், மொத்தம் ரூ.5,000 கோடியில் 5 ஆண்டுகள்(2024-2029) செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் உலக மகளிர் உச்சி மாநாடு-2026 சென்னை வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது.
இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநாட்டை தொடங்கி வைத்தார். அதன்பின் டிஎன்டபிள்யு-சேஃப் திட்டத்தையும், மகளிர் பயன்பாட்டுக்கான பல்வேறு வாகனங்களின் சேவைகளையும் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு பணிநியமன ஆணைகளையும், பல்வேறு திட்டங்களின்கீழ் பெண்களுக்கு தொழில் தொடங்க கடனுதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
மேலும், தொழில் துறைகளில் பெண்கள் பங்களிப்பை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அப்போது கையெழுத்தாகின.
இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் வேலைக்குச் செல்லும் மாநிலமாக தமிழகம்தான் உள்ளது. ஆனால், பெண்கள் அதிகமாக வேலைக்குச் செல்வதிலேயே நாம் திருப்தி அடைந்துவிடக் கூடாது.
புதிதாக வளர்ந்து வரும் துறைகளில் பெண்கள் இடம்பெற வேண்டும். உயர் பொறுப்புகளில் ஆண்களுக்கு சரிசமமாக பெண்கள் இருக்க வேண்டும். அதற்காகவே உலக வங்கியின் நிதி உதவியுடன் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தை தற்போது தொடங்கியுள்ளோம்.
பெண்கள்தான் இந்த சமூகத்தின் முதுகெலும்பு. அவர்கள் முன்னேறாமல், எந்த நாடும் வளர முடியாது. பெண்கள் நலனுக்காக மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம் உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாகவே டிஎன் டபிள்யு-சேஃப் அமைந்துள்ளது.
பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டுமெனில் குழந்தைகள், முதியோரை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை யாராவது எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நடைமுறை சிக்கலை உணர்ந்து குழந்தை, முதியோர் பராமரிப்பு, பாதுகாப்பான தங்குமிடங்கள் என்று அதற்கான ஆதரவு சேவைகளையும் இத்திட்டம் வழங்குவது பாராட்டுக்குரியதாகும்.
மேலும், பெண்களின் பாதுகாப்பிலும் இந்தத் திட்டம் கவனம் செலுத்துகிறது தமிழக பெண்களுக்கு நான் ஒரு உறுதி தருகிறேன். ஒவ்வொரு பெண்ணும் கல்வி பயில, தொழில் முனைவோராக மாற, எந்தவித அச்சமும் இல்லாமல் சுதந்திரமாக வாழக்கூடிய கட்டமைப்புகள் தமிழகத்தில் உருவாக்கப்படும். இவ்வாறு பேசினார்.
துணை முதல்வர் உதயநிதி பேசும்போது, “தமிழக பெண்களின் வளர்ச்சியை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்வதை உறுதிசெய்ய உலக வங்கியின் ரூ.1,185 கோடி நிதியுதவியுடன் ரூ.5 ஆயிரம் கோடியில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அதனுடன் சி லீட்ஸ் (She Leads) என்ற தலைப்பில் சர்வதேச மாநாடும் தொடங்கியுள்ளோம். பெண் குழந்தைகள் தொடங்கி, பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள், பணிக்குச் செல்லும் மகளிர், இல்லத்தரசிகள், வயதான பெண்கள் வரை அனைத்து தரப்பு மகளிரின் பாதுகாப்பையும், வளர்ச்சியையும் உறுதி செய்யும்.
இத்தகைய திட்டங்களால் நமது திராவிட மாடல் ஆட்சி, இந்தியாவுக்கே முன்மாதிரியாக திகழ்கிறது” என்று தெரிவித்தார். இந்த மாநாட்டில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், கீதா ஜீவன், மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமரி, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், உலக வங்கி மண்டல இயக்குநர் செம் மெட்டேஉட்பட பலர் கலந்துகொண்டனர்.