புதுச்சேரி: “புதுச்சேரி பிராந்தியமான ஏனாமில் 'அர்னாப்' புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டு மத்திய அரசின் அவசர உதவி தேவைப்படுகிறது. துறை வாரியான சேதங்கள் மற்றும் தேவைப்படும் நிதி குறித்த விரிவான அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும். ரூ.50 கோடி இடைக்கால நிதி உதவி தேவை” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக இன்று மாலை அவர் அனுப்பிய கடிதம் விவரம்: ‘புயலால் அக்.27, 28 தேதிகளில் ஏனாம் பகுதி பாதிக்கப்பட்டது. காற்றின் வேகம் 150 கி.மீ வரை இருந்தது. மேலும் 113.20 மி.மீ மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. பலத்த காற்று, கனமழை மற்றும் கடல் நீர் உட்புகுந்ததால், விவசாயம், வீடுகள், மின் விநியோகக் கட்டமைப்பு மற்றும் பொது உள்கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் அத்தியாவசிய சேவைகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
முதற்கட்ட மதிப்பீடுகளின்படி, சுமார் 101 ஹெக்டேர் பரப்பளவிலான நெற்பயிர்கள் முழுமையாக அழிந்துள்ளன. மேலும் தென்னை மற்றும் வாழை சாகுபடிகளும் சேதமடைந்துள்ளன. சுமார் 30 வீடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியளவோ சேதமடைந்துள்ளன.
தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது. மின் கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பர்கள் சேதமடைந்தன. சாலைகள், குடிநீர் விநியோக அமைப்புகள், அரசு கட்டிடங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட சுகாதார உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன.
மீன்பிடித் தொழில் மற்றும் அது சார்ந்த வாழ்வாதாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. படகுகள், வலைகள் மற்றும் மீன் வளர்ப்பு கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.
இழப்புகள் குறித்த விரிவான சரிபார்ப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உரிய நேரத்தில் சீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசின் உடனடி ஆதரவு மிக அவசியமாகும்.
இத்தகைய சூழலில், விரிவான மதிப்பீடுகள் முடிக்கப்பட்டு முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை, தற்போதைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, இடைக்கால மத்திய நிதி உதவியாக ரூ.50 கோடியை விடுவிக்கத் தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும்.
களத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை நேரில் ஆய்வு செய்யவும், கூடுதல் உதவிகளை ஒருங்கிணைக்கவும், மத்திய அமைச்சகங்களுக்கு இடையிலான ஒரு குழுவை விரைவாக அனுப்பி வையுங்கள்” என்று முதல்வர் ரங்கசாமி கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.