“காவிரி டெல்டா விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்” - பி.ஆர்.பாண்டியன்

“காவிரி டெல்டா விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்” - பி.ஆர்.பாண்டியன்
Updated on: 
2 min read

திருநெல்வேலி: “காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்” என்று தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு வழிகாட்டல் குழு கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார். இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், “தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் முதல் மாநாடு கோவையில் கடந்த ஆண்டு நடைபெற்றது. பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். இதை தொடர்ந்து 2-வது மாநாடு சென்னை நந்தனம் வர்த்தக மையத்தில் வரும் ஜனவரி 22, 23, 24-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய், மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், தமிழக ஆளுநர் அர்லேக்கர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பது, அதற்கு தேவையான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது, உலகளாவிய ஏற்றுமதியை உருவாக்குவது, கால்நடை வளர்ப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்படும் ஆலோசனை கூட்டங்களில் விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கைகள் இந்த மாநாட்டில் தீர்மானங்களாக நிறைவேற்றப்படும்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பின் கனிம வளங்களை அண்டை மாநிலங்களுக்கு கொண்டுசெல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை வரவேற்கிறோம். வனவிலங்குகள் விளை நிலங்களுக்குள் புகுவதை தடுக்க சூரிய மின் வேலிகளை அமைக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி வருகிறோம்.

கால்நடை வளர்ப்பை ஊக்குவிப்பதன் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்க முடியும். எனவே, பால் உற்பத்தியாளர்களுக்குக் கட்டுப்படியான விலை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இயற்கை விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்வதற்காக சந்தைகளில் தனி இடம் ஒதுக்கீடு செய்து, நேரடி விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டும். ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை சார்ந்த விவசாயத்திலிருந்து இயற்கை விவசாயத்தை நோக்கி விவசாயிகள் மாறுவதற்கு தேவையான ஆதரவையும் அரசு வழங்க வேண்டும். தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நிதியை ஒதுக்கி பணிகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த குளங்களின் கரைகளை பலப்படுத்த வேண்டும். ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் பாசன நீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டும். கடந்த காலங்களில் நீர் மேலாண்மையில் உரிய கவனம் செலுத்தப்படாததாலும், காலநிலை மாற்றங்களாலும் விவசாய உற்பத்தி பாதிக்கப்படுகிறது. அரிசி உற்பத்தி குறையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. வேளாண்மைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாததால், பிற மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்களை சார்ந்திருக்கும் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

சன்னரக அரிசியை மக்கள் விரும்புவதை கருத்தில் கொண்டு, சன்னரக நெல்லுக்கு கூடுதல் விலை கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆட்சியில் வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டாலும், அதில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை.

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை விரைவாக வழங்க வேண்டும். வேளாண்துறை மற்றும் நீர்வளத்துறையில் உயர் அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்படுவது நிர்வாகத்தை பாதிக்கும். இவ்வாறு அடிக்கடி பணியிடம் மாற்றம் செய்யப்படுவது முதல்வருக்கு தெரிந்துதான் நடக்கிறதா என தெரியவில்லை.

நீர்ப்பாசன திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தத் துறை சார்ந்த அனுபவமுள்ள அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றுவதற்கான சூழலை அரசு உருவாக்க வேண்டும். ஊழல் முறைகேடுகள் இல்லாத ஆட்சியை நடத்த வேண்டும் என்று முதல்வர் கொள்கை முடிவு எடுத்து நடத்துகிறபோது இந்த பணி மாறுதல் அரசுக்கு அவப்பெயரை உருவாக்கும்.

காவிரி நீர்ப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களில் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை செயல்படுத்துவதிலும் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் தனியார் நிறுவனங்கள் வணிக நோக்கத்துடன் செயல்படுவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். கொள்முதல் செய்த நெல்லுக்கான பணத்தை விவசாயிகளுக்கு வழங்க அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

தமிழகத்தில் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். தென்மேற்கு பருவமழை குறைந்ததால் காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து, விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என்று பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.

“காவிரி டெல்டா விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்” - பி.ஆர்.பாண்டியன்
பழநி முருகன் கோயிலில் நவ.10-ல் கந்த சஷ்டி விழா தொடக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in