சென்னை: சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் 85 குடிநீர் விநியோக அமைப்புகள் வாயிலாக சென்னையில் உள்ள 85.7 லட்சம் மக்களுக்கு தினமும் 1,200 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கி வருகிறது.
ஒவ்வொரு நிலையத்திலிருந்தும் குடிநீர் விநியோகம் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு பிரதான குழாய்கள் மூலம் தனித்தனியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக்கட்டான காலங்களில் ஒரு பகுதியின் ஆதாரங்களிலிருந்து, பற்றாக்குறை உள்ள மற்றொரு ஆதாரத்துக்கு உபரிநீரை மாற்ற முடியாது. எனவே தற்போதுள்ள குடிநீர் கட்டமைப்பில் உள்ள குறைகளை களையும் வகையில், பெருநகர சென்னையில் பிரதான சுற்று குழாய் (Ring Main) திட்டத்தை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பிரதான சுற்று குழாய் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திறன் கொண்டது. பிரதான சுற்று குழாய் திட்டம் உந்து நிலையங்கள், செலுத்தும் குழாய்கள் மற்றும் விநியோக குழாய்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
சென்னை பெருநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பிரதான சுற்று குழாய் அமைத்தல் மற்றும் அதன் 10 ஆண்டுகளுக்கான செயல்பாடு மற்றும் பராமரிப்பு உட்பட திட்டத்தின் மொத்த செலவு ரூ.3,108.55 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்ததிட்டத்துக்கு தமிழக முதல்வர் கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கி ஆணையிட்டுள்ளார். இத்திட்டம் ஆசிய வளர்ச்சி வங்கியின் கடனுதவியின் கீழ் 4 ஆண்டு ஒப்பந்த காலத்தில் நிறைவேற்றப்படும். மேலும் ரூ.689.40 கோடி மதிப்பீட்டில் நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள கழிவுநீர் கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகள் 4 தொகுப்புகளாக 3 ஆண்டு ஒப்பந்தக் காலத்தில் ஆசிய வளர்ச்சி வங்கியின் கடனுதவியுடன் செயல்படுத்தப்படும். இத்திட்டம் நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் 1.16 லட்சம் குடும்பங்களுக்கு பயனளிக்கும்.
இதற்கும் முதல்வர் கொள்கை ஒப்புதல் வழங்கி ஆணையிட்டுள்ளார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.