சென்னை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுப்பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிப்பதாக புகார்கள் நிலவுகின்றன. கடந்த திமுக ஆட்சியில் பாட்டிலுக்கு ரூ.10 வசூலிக்கப்பட்டதை முதல்வர் விஜய், தேர்தல் பிரச்சாரத்தின்போது கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக வரும் புகார் குறித்து முதல்வர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் மதுவிலக்கு துறை அமைச்சர் கே.விக்னேஷ், உள்துறை செயலர் க.மணிவாசன் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் கூடுதல் கட்டணம் வசூல், 717 டாஸ்மாக் கடைகள் மூடல் நிலவரம் உட்பட பல விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.
அதன்பின்னர் மதுப்பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை மட்டுமே வசூலிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் கூடுதல் கட்டணம் பெறக்கூடாது.
அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தயார்செய்ய வேண்டுமென துறை அலுவலர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதுதவிர கல்வி மையங்கள், கோயில்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகே இருந்த 717 டாஸ்மாக் கடைகள் மூடல் நடவடிக்கை குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
அப்போது நிர்வாக சிக்கல்களால் கணிசமான கடைகள் மட்டும் இன்னும் மூடப்படாமல் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், அந்த பிரச்சினைகளை சரி செய்து மீதமுள்ள கடைகளையும் கால தாமதமின்றி உடனே மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதன்பின் மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்களை வெளிப்படையாக பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்களை முதல்வர் வழங்கியதாகவும், இது சார்ந்து விரைவில் அறிவிப்புகள் வெளியாகலாம் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.