சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாக இயக்குநரகம் சார்பில் ரூ.174 கோடியே 97 லட்சம் செலவில் முடிவுற்ற 12 திட்டப் பணிகளை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்வர் விஜய் மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார். மேலும் 2 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதில், தலைமைச் செயலாளர் சாய்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஆனந்த், நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர் மதுசூதன் ரெட்டி, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை: நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் ரூ.174.97 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் விஜய், சென்னையில் ரூ.11.15 கோடியில் பசுமை வழித்தடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சி சார்பில் மணலி மண்டலத்தில் ரூ.58.33 கோடியில் புனரமைக்கப்பட்ட கடப்பாக்கம் ஏரி, திருவிக மண்டலம் புளியந்தோப்பு, தட்டான்குளத்தில் ரூ. 35 கோடியில் கட்டப்பட்ட கழிவுமாற்று நிலையம், மணலி, மாத்தூர் எம்.எம்.டி.ஏ. பகுதியில் ரூ.4 கோடியில் அமைக்கப்பட்ட நீர் உறிஞ்சும் பூங்கா என ரூ.97.33 கோடியில் முடிவுற்ற திட்டங்களை முதல்வர் விஜய் நேற்று காணொலியில் தொடங்கி வைத்தார்.
இதுதவிர, சென்னை விமான நிலையப் பகுதியில் உள்ள பூங்கா மற்றும் கிண்டி, கத்திப்பாரா முதல் சென்னை விமான நிலைய நுழைவுவாயில் வரை ரூ.11.15 கோடியில் 5.30 கிமீக்கு பசுமை வழித்தடம் அமைப்பதற்கான 2 புதிய திட்டப் பணிகளுக்குமுதல்வர் அடிக்கல் நாட்டினார்.
நகராட்சி நிர்வாக இயக்குநரகம் சார்பில், மதுரை, விருதாசலம், திட்டக்குடி, ராணிப்பேட்டை, வில்லிபுத்தூர், கொமாரபாளையம், பொள்ளாச்சி, வெள்ளக்கோவில் பகுதிகளில் ரூ.73.64 கோடியில் முடிவுற்ற 8 திட்டப்பணிகளை தொடங்கி வைத்து மக்கள் பயன்பாட்டக்கு முதல்வர் விஜய் கொண்டு வந்தார்.
மேலும், சென்னை குடிநீர் வாரியம் சார்பில், அமேசான் (Amazon) நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ், ரூ.4 கோடி செலவில் கோட்டூர்புரத்தில் நாளொன்றுக்கு 10 லட்சம் லிட்டர் (1 MLD) கழிவுநீரைச் சுத்திகரித்து, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் வகையில் நவீன தொழில்நுட்பங்களுடன்அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.
நீர்வளத்துறை வழங்கிய 6,000 சதுர அடி நிலப்பரப்பில், பக்கிங்ஹாம் கால்வாய் அடையாறு ஆற்றில் கலக்கும் முகத்துவாரப் பகுதியில் நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட “சிறந்த மோட்டார் அல்லாத போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம்” விருது, மத்திய அரசின் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் தமிழகத்தின் முதல் தூய்மைநகரமாக தேர்வு செய்யப்பட்ட தேனி-அல்லிநகரம் நகராட்சிக்கு “தூய்மை நகரம்” விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதுகளை அதிகாரிகள் முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
நிகழ்வில், தலைமைச்செயலர் சாய்குமார், துறையின் செயலர் ககன்தீப் சிங் பேடி, சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் த.ஆனந்த், நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி, சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.