சென்னை: தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் தவணை முறை திட்டத்தின் கீழ் மனை, வீடு மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒதுக்கீடு பெற்று தவணைக் காலம் முடிவுற்ற பின்பும் விற்பனைப் பத்திரம் பெறாமல் சுமார் 6,496 ஒதுக்கீடுதாரர்கள் உள்ளனர்.
இவர்கள் முழுத் தொகையையும் செலுத்தாமல் விற்பனைப் பத்திரம் பெற முடியாமல் உள்ளனர். இந்நிலையில், முதல்வர் விஜய் அறிவுரையின்படி ஒதுக்கீடுதாரர்களுக்கு விற்பனைப் பத்திரம் விரைவாக வழங்க வட்டித் தள்ளுபடி செய்வதாக 2026-27-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது சட்டப்பேரவையில் வீட்டு வசதித் துறை அமைச்சர் அறிவித்தார்.
கடந்த மார்ச் 31-ம் தேதிக்குள் தவணைக் காலம் முடிவுற்ற திட்டங்களில், நிலுவைத்தொகை செலுத்தத் தவறியவர்களுக்கு விதிக்கப்படும் அபராத வட்டித் தள்ளுபடி, வட்டி முதலாக்கத்தின் மீதான வட்டித் தள்ளுபடி மற்றும் நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தில் வசூலிக்கப்படும் தொகைக்கான வட்டியில் ஒவ்வொரு ஆண்டுக்கும் 5 மாதத்துக்கான வட்டித் தள்ளுபடியும் செய்து விற்பனைப் பத்திரம் வழங்கப்படும்.
இந்தத் திட்டம் ஓராண்டுக்குச் சிறப்புத் திட்டமாகச் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். இத்திட்டம் மூலம், 6,496 ஒதுக்கீடுதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால், வாரியத்துக்கு ரூ. 92.39 கோடி வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், இச்சிறப்பு வட்டி சலுகையின் மூலம் ஒதுக்கீட்டாளர்களுக்கு ரூ.18.45 கோடி தள்ளுபடியும் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.