சென்னை: எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: தான் எழுதும் நிலப்பரப்பின் கருப்பொருட்களை எல்லாம் கதையின் ஓட்டத்தில் இயல்பாகப் பின்னிப் பிணைக்கும் எழுத்தாளர் தோழர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு பாராட்டுகள்.
தாமதப்படுத்தினாலும், இறுதியில் சரியான கைகளில் சாகித்ய அகாடமி விருது சேர இருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். நம் மண்ணின் கதைகள் அனைவரையும் சேர வாழ்த்துகிறேன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை: தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கும், குறிப்பாக தமிழ் சிறுகதைகளின் பாரம்பரியமும் குறித்து ஆழமான பார்வையை வழங்கும் இந்த நூலுக்குக் கிடைத்திருக்கும் இந்த உயரிய அங்கீகாரம், எழுத்தாளர் அவர்களின் இலக்கியப் பங்களிப்புக்கான சிறந்த பாராட்டாகும்.
மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம்: கடந்த 50 ஆண்டுகளாக எழுதி வரும் தமிழின் சிறந்த எழுத்தாளரான ச.தமிழ்ச்செல்வன் சிறுகதைகள், கட்டுரைகள், குழந்தை இலக்கியம் மட்டுமல்லாமல் இடதுசாரி அரசியல் சார்ந்த பல்வேறு படைப்புகளை எழுதியுள்ளார்.
தனது எழுத்தில் எப்போதும் உழைக்கும் வர்க்கக் கண்ணோட்டத்தில், அழகியல் குறையாமல் தொடர்ந்து எழுதி வருபவர். தற்போது விருது பெற்றுள்ள நூலையும் அதே கண்ணோட்டத்தில் எழுதி விருது பெற்றுள்ளார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை: எழுத்தாளர் தமிழ்ச்செல்வனின் எழுத்துப்பணி செந்தமிழ் போல மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: எளிமையான நடையிலும் மொழியிலும் சிறுகதைகளை எழுதுவதில் தனித்துவமிக்கவராக திகழும் எழுத்தாளரின் எழுத்துப் பயணம் மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வானதால் தேசிய அளவில் தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் ஊக்கமளிக்கிறார்.