சென்னை: சென்னையில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் மாநகராட்சி சார்பில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தீவிர தூய்மைப் பணி மூலம் 78 டன் கழிவுகள் அகற்றப்பட்டன.
இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொதுமக்களுக்கு தூய்மையான, பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான வாழ்விடத்தை உறுதி செய்யும் நோக்கில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளிலும் மாநகராட்சி சார்பில் சிறப்புத் தீவிர தூய்மைப் பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன.
இதன்படி, குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியிருந்த குப்பைகள் மற்றும் கட்டிட இடிபாட்டுக் கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டன. குடியிருப்புகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வளர்ந்திருந்த புற்கள், களைகள் மற்றும் புதர்கள் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன. குடியிருப்புப் பகுதிகளில் இருந்த பயன்பாடற்ற பொருட்கள் மற்றும் தேவையற்ற கழிவுகள் அகற்றப்பட்டன. பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்களில் தேங்கியிருந்த குப்பைகள் மற்றும் கட்டிடக் கழிவுகள் அகற்றப்பட்டன.
குடியிருப்புக் கட்டிடங்களுக்கு இடையிலான காலியிடங்கள் மற்றும் கட்டிடங்களைச் சுற்றியுள்ள காலியிடங்களில் தேங்கியிருந்த குப்பைகள் மற்றும் கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டன. இச்சிறப்புத் தீவிரத் தூய்மைப் பணியின் போது, 51 டன் குப்பைகள் மற்றும் 27 டன் கட்டிடக் கழிவுகள் என மொத்தம் 78 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டன. இப்பணியில் மாநகராட்சியின் சார்பில் 1,142 தூய்மைப் பணியாளர்கள், 225 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.