பிரதமரின் உருவபொம்மையை எரிக்க முயன்ற காங்கிரஸாரை விரட்டியடித்த போலீஸார். படங்கள்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி: டெல்லியில் நடந்த ஏ.ஐ மாநாட்டில் இளைஞர் காங்கிரஸார் போராட்டம் நடத்தி, தங்களது மேல் சட்டையைக் கழற்றி இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிராக முழக்கமிட்டனர்.
இதைக் கண்டித்து புதுச்சேரி வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் மாலை பாஜக இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ராகுல்காந்தி உருவ பொம்மையை எரித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள கல்வித் துறை அலுவலகம் எதிரே காங்கிரஸார் நேற்று திரண்டனர். காங்கிரஸ் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்எல்ஏ, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நடராஜன், மகளிர் காங்கிரஸ் தலைவி நிஷா உள்ளிட்டோர் போராட்டம் நடத்த தயாராகினர்.
தகவலறிந்த ரெட்டியார்பாளையம் போலீஸார் அங்கு வந்தனர். மேலும், பாஜக நிர்வாகிகளும் கட்சி அலுவலகத்தில் ஒன்று கூடினர். இதனிடையே, காங்கிரஸார் ஊர்வலமாகப் புறப்பட்டு பாஜக அலுவலகம் நோக்கி முன்னேறினர். சித்தானந்தா நகர் 4-வது குறுக்கு தெருவில் போலீஸாரின் தடுப்புகளை மீறிய காங்கிரஸார், பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
அப்போது, முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர், செயலாளர் வெற்றிச்செல்வன் மற்றும் பாஜகவினர் திரண்டு, காங்கிரஸ் கட்சியினருடன் மோதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கற்கள், காலணிகளை வீசி எறிந்தனர். அங்கிருந்த போலீஸார் இரு தரப்பினரையும் விரட்டி அடித்தனர். பின்னர் காங்கிரஸார் மீண்டும் எல்லை பிள்ளைச்சாவடி சந்திப்பு அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த மோதலின்போது எஸ்.பி. வம்சிதரெட்டிக்கு கையில் காயம் ஏற்பட்டது. மேலும், இரு தரப்பைச் சேர்ந்த சிலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது. தொடர்ந்து, ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். இதையொட்டி, பாஜக அலுவலகம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.