செ.கு.தமிழரசன்

 
தமிழகம்

கீழ்வெண்மணி சம்பவத்தின் போது கையாண்ட முறையை தொடரும் திமுக: செ.கு.தமிழரசன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

இந்திய குடியரசு கட்சியின் மாநில செயற்குழு மற்றும் நிர்வாகக் குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் தலைமையில் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பட்டியலின மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கான திட்டத்தை திமுகவின் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் செயல்படுத்தவில்லை. பட்டியலின மக்களை உதாசீனப்படுத்தி ஆட்சி நடத்துகின்றனர்.

1968-ல் கீழ்வெண்மணி சம்பவத்தில் தூங்கிக் கொண்டிருந்த 44 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டபோது, ஆட்சியில் இருந்த திமுக என்ன அணுகுமுறையை கடைபிடித்ததோ, அதை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இப்போதும் கடைபிடிக்கிறது. தமிழகத்தில் கடந்தாண்டு பதிவு செய்யப்பட்ட 2 ஆயிரம் வன்கொடுமை வழக்குகளில் எத்தனை பேருக்கு தண்டனை பெற்று கொடுத்துள்ளனர்? பாதி வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள வழக்குகள் சமரசம் செய்யப்பட்டுள்ளது.

துப்புரவு பணியை 99 சதவீத பேர் பட்டியலின மக்கள் செய்கின்றனர். இதனால், அவர்களது பணி நிரந்தர கோரிக்கைக்கு திராவிட மாடல் அரசு செவிசாய்க்கவில்லை. கர்நாடகா, பிஹார் மாநிலத்தில் வேலைவாய்ப்பில் பட்டியலின மக்களுக்கு கூடுதலாக 2 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் பட்டியலின மக்களின் எண்ணிக்கை தெரியவில்லை. சமூக அநீதியை இழைக்கின்றனர்.பட்டியலின மக்களின் இடஒதுக்கீட்டில், உள்ஒதுக்கீடு கொண்டு வந்து பட்டியலின மக்களின் ஒற்றுமையை திமுக சீர்குலைத்து விட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2 மாதங்களில் முழு வடிவம் பெறும். அப்போது கூட்டணி குறித்து அறிவிப்போம். கடந்த தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். அதிமுக கூட்டணியில் நாங்கள் மூத்த கட்சி. கூட்டணி ஆட்சிக்கான தேவை உருவாகவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT