

பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே உச்சக்கட்ட மோதல் போக்கு நிலவி வருகிறது. தந்தை, மகனுக்கு இடையே நிலவி வரும் பிரச்சினையால் கட்சியினர் இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சந்தித்த அன்புமணி கூட்டணியை உறுதி செய்தார். இதையடுத்து, ராமதாஸ் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்று கடந்த சில தினங்களாக தைலாபுரம் தோட்டத்தில் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், சென்னையில் முகாமிட்டு கூட்டணி பேச்சுவார்த்தையில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
கூட்டணி தொடர்பாக ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்து வருவதாக கூறுகிறார்கள். தேர்தல் நேரத்தில் இந்த மாதிரி பல யூகங்கள், பேச்சுக்கள் வரத்தான் செய்யும். இதில் உண்மையும் இருக்கும். பொய்யும் இருக்கும். தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் இல்லை என்று இன்னும் நாங்கள் முடிவு எடுக்கவில்லை. நாட்கள் வேகமாக போய்க்கொண்டிருக்கிறது. விரைவில் முடிவு எடுப்போம்.
புதிய கூட்டணிக்கு செல்வோமா என்பதை பொறுத்தவரை, தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம். நடக்காமலும் போகலாம். புதிய கூட்டணி ஏற்படுமா என்பதற்கு பொறுத்து இருந்து பதில் சொல்கிறேன். திமுகவுடன் கூட்டணி இருக்குமா என்பதை தற்போதைய நிலையில் உறுதிப்படுத்த முடியாது என்றார்.