அப்பாவு | கோப்புப் படம் 
தமிழகம்

“விஜய்க்கு கூடும் ‘சினிமா கூட்டம்’ வாக்குகளாக மாறாது” - அப்பாவு கருத்து

அ.அருள்தாசன்

நெல்லை: “விஜய்க்கு கூடும் கூட்டம் என்பது வெறும் ‘சினிமா கூட்டம்’ மட்டுமே. அது வாக்குகளாக மாறாது” என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத் திருத்தம், சிறுபான்மை அமைப்புகளை குறிவைத்து கொண்டுவரப்பட்டது. இதன்படி, கிறிஸ்தவ மற்றும் சிறுபான்மை தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து நேரடியாக நிதி பெற முடியாது, அரசின் மூலமே பெற வேண்டும்.

          

அந்த நிதியில் ஏதேனும் சிறு தவறு இருப்பதாக அரசு கருதினால், அந்த நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்யவும், அவர்களின் ஒட்டுமொத்த சொத்துக்களையும் அரசு கையகப்படுத்தவும் இச்சட்டம் அதிகாரம் அளிக்கிறது.

சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு தற்போது இது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதனை எதிர்த்து தமிழக முதல்வர் முதன்முதலில் குரல் கொடுத்துள்ளார். நடிகர் விஜய்க்கு கூடும் கூட்டம் என்பது வெறும் ‘சினிமா கூட்டம்’ மட்டுமே. வடிவேலு, விஜயகாந்த் போன்ற நடிகர்களுக்கு கூடும் கூட்டத்தை போன்றது. இது வாக்குகளாக மாறாது.

மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தூண்டுதலின் பெயரில்தான் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார். விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துக்குப் போடும் ஒரு வாக்கு என்பது, பாஜகவுக்குப் போடும் இரண்டு வாக்குகளுக்கு சமம்” என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT