சென்னை: வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் மற்றும் தூர்வாரும் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் சாய்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அடையார், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் மற்றும் நீர்நிலைகள் தூர்வாரும் பணிகளை தலைமைச் செயலர் எம்.சாய்குமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குறிப்பாக அடையாறு மண்டலத்தில் ஐஐடி பகுதியில் இருந்து வரும் மழைநீரை பக்கிங்ஹாம் கால்வாயில் செலுத்தும் வகையில், டைடல் பார்க் பகுதியில் ரூ.13.52 கோடியில் கட்டப்பட்டுவரும் இரட்டை நீர் வழிப்பாதை பணிகளை ஆய்வு செய்த சாய்குமார் அதை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, பெருங்குடி மண்டலம் மயிலை பாலாஜி நகரில் நடைபெறும் கால்வாய் மேம்பாட்டுப் பணிகளை பார்வையிட்டார். இந்த கால்வாயில் வெளியேறும் மழை நீரானது வேளச்சேரி, மேடவாக்கம் சாலை கால்வாய் வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு சென்றடையும். மேம்பாட்டுப் பணி காரணமாக ராம் நகர் (தெற்கு), குபேரன் நகர், சதாசிவம் நகர் ஆகிய குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்காது.
ஏரிகள் தூர்வாரும் பணி: அதன் பின்னர், நாராயணபுரம் ஏரியில் நீர்வளத்துறை சார்பில் நடைபெறும் ஆகாயத் தாமரை அகற்றும் பணியையும் மதகுகளின் உறுதித்தன்மை குறித்தும் தலைமைச் செயலர் சாய்குமார் ஆய்வு செய்தார். தொடர்ந்து பெருங்குடி ரேடியல் சாலை முதல் குப்பைக் கிடங்கு வரை உள்ள பகுதிகளில், தண்ணீர் எளிதில் வெளியேறும் வகையில் 17 சிறு பாலங்களில் உள்ள அடைப்புகள் மற்றும் ஆகாயத் தாமரைகளை அகற்ற அவர் உத்தரவிட்டார்.
இதையடுத்து துரைப்பாக்கம் ஓஎம்ஆர் சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் இடத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.73 கோடியில் நடை பெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டார். பள்ளிக்கரணை சதுப்பு நில நீரை பக்கிங்ஹாம் கால்வாயில் சேர்க்கும் இந்த பணியை வேகப்படுத்த அவர் அறிவுறுத்தினார்.
ஒட்டுமொத்தமாக பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மாநகராட்சி, நீர்வளம், நெடுஞ்சாலைகள், மெட்ரோ ரயில் நிறுவனம், குடிநீர் வாரியம் உட்பட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து விரைந்து முடித்து, இந்த மாத இறுதிக்குள் தயார் நிலையில் இருக்க வேண்டும். இந்த பணிகளால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு தலைமைச் செயலர் சாய்குமார் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, நகராட்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, நெடுஞ்சாலைத் துறை செயலர் சுஞ்சோங்கம் ஜாதக் சிரு, நீர்வளத்துறை செயலர் பிரசாந்த் எம்.வடநரே, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.