

பாம்பன் பாலம் பகுதியில் படகு மூலம் நடந்த ஆய்வு.
ராமநாதபுரம்: ராமேசுவரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், ஆன்மிக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கடல் வழியாகப் பயணித்து பாம்பன் ரயில்வே செங்குத்து தூக்குப் பாலம் மற்றும் சாலை பாலத்தின் அழகையும், கடல் அழகையும் ரசிப்பதற்காக பயணிகள் படகு போக்குவரத்து தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி இப்படகு சேவை ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் தொடங்கி, பாம்பன் பாலம் மற்றும் பாம்பன் கடல் கால்வாய் வழியாக மண்டபம் பகுதியைச் சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்னி தீர்த்தக் கடற்கரையில் இருந்து பாம்பன் பாலம் வழியாக மண்டபம் செல்லும் தூரம், கடலின் ஆழம், பாம்பன் புதிய ரயில்வே செங்குத்து தூக்கு பாலம் வழியாக பயணிகள் படகு கடந்து செல்வதற்கான உயரம் உள்ளிட்டவைகளை, தமிழ்நாடு கடல்சார் வாரியம் ராமேசுவரம் துறைமுக அதிகாரி கேப்டன் மெனக்சா, கடல்சார் வாரிய சென்னை ஆலோசனைக் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது முதற்கட்டமாக பயணிகள் படகு சேவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வு முடிவின் அடிப்படையில் அக்னி தீர்த்தக் கடற்கரையில் இருந்து பாம்பன் பாலம் வழியாக மண்டபத்துக்கு விரைவில் புதிய உள்நாட்டுப் பயணிகள் படகுப் போக்குவரத்து சேவை தொடங்குவதற்கான பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.