தமிழகம்

717 டாஸ்மாக் கடைகளை 2 வாரத்தில் மூடவேண்டும்: முதல்வர் விஜய் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழுவதும் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை 2 வாரத்துக்குள் மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதல்வராக மே 10-ம் தேதி விஜய் பொறுப்பேற்றார். பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட பின்னர், தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்ற 3 அறிவிப்புகள் தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட்டார்.

அதில் ஒன்று போதைப் பொருள் தடுப்புக்கான பிரிவுகளை உருவாக்குவது. இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று காலை புதிய அறிவிப்பு ஒன்றை முதல்வர் விஜய் வெளியிட்டார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறி்ப்பு: தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் (டாஸ்மாக்) 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன.

அதில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறு முதல்வர் விஜய் உத்தரவிட்டார். அதற்கிணங்க, இந்த மூன்று வகைப்பாடுகளில் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.

பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த 2 வாரத்துக்குள் மூட, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, முதல்வராக விஜய் பொறுப்பேற்ற அன்றே, நடைபெற்ற சட்டம் - ஒழுங்கு தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில், இது தொடர்பான அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே அதிகாரிகள் கணக்கெடுத்து, முதல்வரிடம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து நேற்றே 50 கடைகள் மூடப்பட்டன. அதன்படி, சென்னை மண்டலத்தில் 10 கடைகள், திருச்சி-9, மதுரை -9, சேலம்-10, கோவை மண்டலத்தில் 12 கடைகள் என 50 கடைகள் மூடப்பட்டுள்ளன.

பணியாளர்கள் சங்கம் கோரிக்கை

முதல்வரின் இந்த அறிவிப்பை பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன. அதே நேரம், கடைகள் மூடப்படுவதால் அதில் உள்ள பணியாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க முதல்வருக்கு, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்க செயலாளர் த.தனசேகரன் வெளியிட்டஅறிக்கை: தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூடும் முதல்வரின் உத்தரவை வரவேற்கிறோம்.

அதேநேரம் மூடப்படும் கடை களில் 23 ஆண்டுகளாக பணியாற்றும் 3,500 பணியாளர்களுக்கு பணியிழப்பு ஏற்படும். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அரசின் பிற துறைகளில் பணியாற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT