தமிழகம்

“ஆட்சி தொடரவும், தமிழ்நாடு முன்னேறவும் இணைந்து பயணிப்போம்” - தேமுதிகவுக்கு ஸ்டாலின் வரவேற்பு

தமிழினி

சென்னை: “தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேற இணைந்து பயணிப்போம்” என திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

2026-ல் நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தேமுதிக யாரும் எதிர்பாராத நகர்வாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில், “தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

          

சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி பிரேமலதா விஜயகாந்தையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்.

கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும். திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம். வெல்வோம் ஒன்றாக” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT