சென்னை: கிரிக்கெட்டில் நான் ஒரு ஆப் ஸ்பின்னர், எனது தந்தை கருணாநிதிக்கு பந்து வீசியிருக்கிறேன் என்று இளம் வீரர் களுடனான கலந்துரையாடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இளம் விளையாட்டு வீரர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி ‘வைப் வித் எம்கேஎஸ்’ (Vibe With MKS) எனும் பெயரில் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் சமீபத்தில் நடைபெற்றது.
இதில் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், அவர்களுடன் இயல்பாக கலந்துரையாடினார். அப்போது தனது இளமைக்கால நினைவுகள், கிரிக்கெட் ஆர்வம் மற்றும் அரசியல் அழுத்தங்களைக் கையாளும் விதம் குறித்து அவர் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொண்டார்.
தொடர்ந்து வீரர்கள் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்கள் விவரம்: விளையாட்டைப் பொறுத்தவரை எனக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும். நான் ஒரு ஆப் ஸ்பின்னர்.
மறைந்த தலைவர் கருணாநிதிக்கும் கிரிக்கெட் மீது தீராத காதல் உண்டு. அவர் விளையாடும் போதெல்லாம், நான் அவருக்குப் பந்து வீசியிருக்கிறேன். கிரிக்கெட்டில் எனக்கு பிடித்த வீரர் எம்.எஸ்.தோனி.
வெற்றியோ, தோல்வியோ ஆட்டத்தில் எத்தகைய நெருக்கடிகள் வந்தாலும், முகத்தில் எந்த பதற்றமும் இல்லாமல் ‘கூல்' ஆக இருந்து அணியை வழிநடத்தும் தோனியின் தலைமைப் பண்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.
அதேபோல், நான் 14 வயதில் இருந்தே பொது வாழ்க்கையில் இருக்கிறேன். அதனால் மன அழுத்தங்கள், நெருக்கடிகள் எனக்கு பழகிப்போன ஒன்றுதான்.
எனினும், அதிக மன அழுத்தம் ஏற்படும் நேரங்களில் புத்தகங்கள் படிப்பேன், இசை கேட்பேன். அதுதான் என்னை ரிலாக்ஸ் செய்யும் மருந்து. வெற்றி என்பது பதக்கங்களில் மட்டும் இல்லை.
ஒழுக்கம், எதையும் தாங்கும் மனப்பக்குவம் மற்றும் விடாமுயற்சி ஆகியவைதான் ஒரு உண்மையான சாம்பியனை உருவாக்குகின்றன. தமிழகத்தின் வருங்கால அடையாளமாக திகழும் உங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். முதல்வரின் இந்த எளிய கலந்துரை யாடல் இளம் வீரர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.