சென்னை: மத்திய அரசின் பத்ம விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர்தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இருந்து பத்ம பூஷண் விருதுக்குத் தேர்வாகியிருக்கும் ராமசாமி பழனிசாமி, எஸ்கேஎம்.மயிலானந்தன் ஆகியோருக்கும், பத்ம விருதுக்குத் தேர்வாகியிருக்கும் ரஞ்சனி பாலசுப்பிரமணியன், காயத்ரி பாலசுப்பிரமணியன், எச்.வி.ஹண்டே, கே.ராமசாமி, கே.விஜயகுமார், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், புண்ணிய மூர்த்தி நடேசன், ஆர்.கிருஷ்ணன், ராஜா ஸ்தபதி காளியப்பன் கவுண்டர், எழுத்தாளர் சிவசங்கரி, திருவாரூர் பக்தவத்சலம், வி.காமகோடி ஆகியோருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களது துறைகளில் தொடர்ந்து சாதனைகளைப் படைத்து, சமூகத்துக்குச் சேவை யாற்றிட இந்த அங்கீகாரம் அவர்களுக்கு பெரும் ஊக்கத்தை வழங்கும் என்று நம்புகிறேன். பத்ம பூஷண் விருது பெற உள்ள டென்னிஸ் வீரரும், எனது நண்பருமான விஜய் அமிர்தராஜ், திரைக்கலைஞர்மம்முட்டி, பத்ம விருது பெற உள்ள நடிகர் மாதவன் ஆகியோருக்கும் எனது சிறப்பு வாழ்த்துகள்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதேபோல, பத்ம விருதுக்கு தேர்வாகியுள்ளவர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.