மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்

 
தமிழகம்

“சிபிஎம் 5 தொகுதிகளை ஏற்க முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்” - பெ.சண்முகம்

வெற்றி மயிலோன்

சென்னை: “திமுக கூட்டணியில் அதிகம் கட்சிகள் இருப்பதால், தொகுதிகள் ஒதுக்குவதில் சிரமம் உள்ளதாக முதல்வர் தெரிவித்தார். மேலும், 5 தொகுதிகள் என்ற எண்ணிக்கையை சிபிஎம் ஏற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இது குறித்து மாநிலக்குழு கூடி விவாதித்து பதில் சொல்வதாக முதல்வரிடம் கூறினோம்.” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் எனத் தெரிவித்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியதாவது: மதசார்பற்ற ஜனநாயக கூட்டணியில் சிபிஎம் தொடந்து பயணித்து வருகிறது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் நீடிப்போம். இதுகுறித்து திமுக தலைமையிலான பேச்சுவார்த்தைக் குழுவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

          

எங்கள் மாநிலக்குழுவின் கூட்டம் நேற்று நடந்து முடிந்தது. திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால், ஏற்கெனவே போட்டியிட்ட 6 தொகுதிகள் என்ற எண்ணிக்கையைவிட கூடுதலாக தொகுதிகளை வலியுறுத்த வேண்டாம், 6 தொகுதிகளில் உடன்பாடு செய்யலாம் என எங்கள் மாநிலக்குழு தெரிவித்தது. அதற்கான முயற்சிகளை எடுக்க மாநிலக்குழு எங்களை அறிவுறுத்தியது.

இதனைத் தொடர்ந்து இன்று முதல்வரிடம் பேசினோம். அப்போது கூட்டணியில் அதிகம் கட்சிகள் இருப்பதால், தொகுதிகள் ஒதுக்குவதில் சிரமம் உள்ளதாக முதல்வர் தெரிவித்தார். அப்போது, 5 தொகுதிகள் என்ற எண்ணிக்கையை சிபிஎம் ஏற்க வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டார். ஆனால், 6 என்ற எண்ணிக்கைக்கு தான் மாநிலக்குழு அனுமதி வழங்கியுள்ளது. எனவே 5 தொகுதிகள் குறித்து மாநிலக்குழு கூடி விவாதித்து பதில் சொல்வதாக முதல்வரிடம் கூறினோம்.

5 தொகுதிகள் என்ற எண்ணிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும், சாதகமான பதிலைச் சொல்ல வேண்டும் எனவும் முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். இனி, எங்கள் மாநிலக் குழு கூடி இதுபற்றி விவாதித்து, இன்று மாலையோ அல்லது நாளையோ முடிவை அறிவிப்போம். ” என்றார்.

SCROLL FOR NEXT