சென்னை: தமிழக முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் குறுகிய காலத்தில் 50 லட்சம் ஃபாலோயர்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்த காலகட்டம் (மே 9-ம் தேதி) வரை, முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கமான ‘cmotamilnadu’ 4 லட்சம் ஃபாலோயர்களுடன் இயங்கி வந்தது.
தொடர்ந்து விஜய் புதிய முதல்வராக பொறுப்பேற்ற அடுத்த 24 மணி நேரத்திலேயே இந்த எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து 10 லட்சத்தை (1 மில்லியன்) எட்டியது.
தற்போது புதிய அரசு பதவியேற்று நான்கு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை 50 லட்சத்தை (5 மில்லியன்) தாண்டி கவனம் ஈர்த்துள்ளது.
அரசு தரப்பில் நிர்வகிக்கப்படும் ஒரு சமூக வலைதள பக்கம், இவ்வளவு குறுகிய காலத்தில் 50 லட்சம் பயனாளர்களை ஈர்த்து புதிய உச்சத்தை தொட்டிருப்பது அரசியல், டிஜிட்டல் தளங்களில் ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் தளம் மட்டுமின்றி, முதல்வர் அலுவலகத்தின் ‘எக்ஸ்’ தளம் 24 லட்சம் (2.4 மில்லியன்) பயனாளர்களுடனும், முகநூல் பக்கம் 19 லட்சம் (1.9 மில்லியன்) பின்தொடர்வோருடனும் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
புதிய அரசின் மீதான இளைஞர்களின் அதிகப்படியான ஈர்ப்பையும், டிஜிட்டல் ஊடகங்களில் அரசு நடவடிக்கைகளைக் கவனிப்பதில் பொதுமக்கள் காட்டும் ஆர்வத்தையும் இத்தகைய வளர்ச்சி வெளிப்படுத்துகிறது.