சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கு பதியப்பட்டுள்ளது என்பதற்காக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் வழக்கு பதிய வேண்டிய கட்டாயமில்லை என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர்களான வேலுமணி, தங்கமணி, வீரமணி, விஜயபாஸ்கர், காமராஜ், அன்பழகன் உள்ளிட்டோருக்கு எதிராக ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் சொத்துக்குவிப்பு மற்றும் ஊழல் வழக்குகளை பதிவு செய்துள்ளதால், அவர்களுக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிடக்கோரி திமுக எம்பி கிரிராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜிஅருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஏப்.20-ல் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சொத்துக் குவிப்பு வழக்கை பதிவு செய்துள்ளனர் என்பதற்காக அமலாக்கத்துறையும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் வழக்கு பதிய வேண்டிய கட்டாயமில்லை.
சட்டவிரோத பணப்பரிமாற்றத்துக்கு உரிய ஆதாரங்கள் இருப்பதாக அதிகாரிகள் திருப்தியடைந்தால் மட்டுமே அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்ய முடியும்.
வழக்குப் பதிவு செய்ய வேண்டுமா, வேண்டாமா என்பதையும் அமலாக்கத்துறை அதிகாரிகள்தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.