சென்னை: வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரத்தை இரண்டு மடங்காக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தார்.
ஐஐடி நிறுவன விழா
மத்திய அரசின் முன்னணி உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை ஐஐடியின் 67-வது ஆண்டு நிறுவன விழா, ஐஐடி வளாகத்தில் உள்ள மாணவர் செயல்பாட்டு மைய கலையரங்கில் நேற்று நடைபெற்றது.
இதில், மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் சிறப்பு விருந்திரனராக கலந்துக் கொண்டு பேசியதாவது: இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்துறை ஆண்டுக்கு 50 லட்சம் முதல் 60 லட்சம் வரையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.
ஆனால், இந்த எண்ணிக்கை 80 லட்சம் அளவுக்கு உயர வேண்டும். நாட்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு சவாலுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை மட்டுமே தீர்வாக இருக்க முடியாது. எனவே, உற்பத்தித் துறையிலும் திறன் மேம்பாட்டிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு திறன் மேம்பாடும், உற்பத்தி துறை வளர்ச்சியும் மிகவும் அவசியம். இதை, தென்கொரியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, சுவீடன் உள்ளிட்ட நாடுகள் நிரூபித்துள்ளன.
வேலைவாய்ப்பை பறிக்குமா ஏஐ?
தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவால் (ஏஐ) வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.
இந்திய வேலைவாய்ப்புச்சூழலை பொருத்தவரையில், ஏஐ தொழில்நுட்பம் என்பது வரப்பிரசாதம் தானே தவிர, அது ஓர் அச்சுறுத்தலாக இருக்காது. ஏஐ வளர்ச்சியால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
அந்த வேலைகளுக்கு தேவையான தொழில்நுட்பத் திறன்களை கொண்டவர்களாக நம்மை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப கல்வி நிறுவனங்களும் தொழில் நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும்.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் சூழலில் வரும் காலத்தில் எரிசக்தி பாதுகாப்பிலும், திறமையான பொது போக்குவரத்திலும் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். இதற்கு ஒருங்கிணைந்த செயல்பாடுகள் அவசியம்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு அமெரிக்கா, சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் அதிக நிதி ஒதுக்கீடு செய்கின்றன. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) அமெரிக்கா 3.46 சதவீதமும், சீனா 2.43 சதவீதமும், தென்கொரியா 4.93 சதவீதமும் நிதி ஒதுக்குகின்றன.
ஆனால், இந்தியா தனது ஜிடிபியில் 0.65 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்குகிறது. இது அதிகரிக்கப்பட வேண்டும். சீனா போட்டி உலகளாவிய வர்த்தகத்தில் சீனா நமக்கு மிகப்பெரிய போட்டியாக இருந்து வருகிறது.
நாம் விவசாய உற்பத்தி, எரிசக்தி பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தற்போது இந்திய பொருளாதாரம் 3.91 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் உள்ளது.
இதை 2030-ம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக அதிகரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஐஐடி முன்னாள் மாணவர்களுக்கு சாதனையாளர் விருது மற்றும் நிறுவன ஆராய்ச்சி மேம்பாட்டு விருதையும் அவர் வழங்கினார்.
முன்னதாக, ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி தலைமையுரை ஆற்றி பேசினார். விழாவில், ஐஐடி டீன்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் பங்கேற்றனர்.