சென்னை குடிநீர் வாரியம்
சென்னை: சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை குடிநீர் வாரியம் சார்பில், அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட தரமணி, தந்தை பெரியார் நகர் பகுதியில் ராமசாமி தெரு, அஞ்சுகம் அம்மாள் தெரு, ராணியம்மாள் தெரு, பாரதியார் தெரு மற்றும் கட்டபொம்மன் தெரு ஆகிய இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் வணிக விடுதிகளில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், குழாய்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகம் தொடர்பாக குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வணிக நிறுவனங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் அதி உயர் மின் அழுத்த மோட்டார்கள் மூலம் சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்சப்படுவது கண்டறியப்பட்டது. அவ்வாறு 20 எண்ணிக்கையிலான மின் மோட்டார் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், வீடுகளில் ஏதேனும் மின் அழுத்த மோட்டார்கள் மூலம் குடிநீர் குழாய்களில் வரும் குடிநீர் உறிஞ்சப்படுகிறதா என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவ்வாறு இருப்பின் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.