சென்னை: ரயில்கள் மீது கல்வீசும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சென்னை ரயில்வே கோட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், ஓடும் ரயில்கள் மீது கல்வீசும் சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இத்தகைய சட்டவிரோத செயல்கள் பயணிகளின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைவதோடு, ரயில்வே ஊழியர்களுக்கு ஆபத்தையும், பொதுச் சொத்துகளுக்கு சேதத்தையும், ரயில் சேவையில் இடையூறுகளையும் ஏற்படுத்துகின்றன.
ரயில்கள் மீது கல்வீசுவது ஒரு கடுமையான குற்றமாகும். ஓடும் ரயிலின் மீது வீசப்படும் கற்கள் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, உள்ளே இருக்கும் பயணிகள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்குப் பெரிய காயங்களையும், நிரந்தர உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்தக் கூடும்.
மேலும், இத்தகைய சம்பவங்கள் பயணிகளிடையே தேவையற்ற அச்சத்தையும், மன உளைச்சலையும் உண்டாக்குகின்றன. ரயில்வே சட்டம், 1989-ன் கீழ் ரயில்கள் மீது கல்வீசுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
ரயில் தண்டவாளங்களுக்கு அருகே வசிக்கும் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், இத்தகைய செயல்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்க வேண்டும். இத்தகைய அசம்பாவிதங்களைத் தடுக்க சமூகத்தின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும்.
ரயில் தண்டவாளங்களுக்கு அருகே சந்தேகத்துக்கிடமான செயல்கள் ஏதேனும் நடந்தால், பொதுமக்கள், பயணிகள் உடனடியாக ரயில்வே உதவி எண் 139-க்குத் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.