சென்னை: சென்னை ரயில்வே கோட்டம் கடந்த நிதியாண்டில் (2025-26) சரக்குப் போக்குவரத்து மூலமாக ரூ.1,289 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
தெற்கு ரயில்வேயில் 6 கோட்டங்களின் ஒன்றான சென்னை கோட்டம் கடந்த நிதியாண்டில் (2025-26) சரக்குப் போக்குவரத்து செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளது.
கடந்த நிதியாண்டில் மொத்தம் ரூ.1,289.78 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதுதவிர பல புதிய சரக்குப் போக்குவரத்து சேவைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நிதியாண்டில் சென்னை ஜவஹர் டாக் துறை முகத்திலிருந்து பொன்மலை (கோல்டன் ராக் - பாய்லர் பிளான்ட்) பகுதிக்கு முதன்முறையாக இரும்புக் குழாய்கள் கொண்டு செல்லப்பட்டன.
இது சென்னை கோட்டத்தின் சரக்குப் போக்குவரத்து பட்டியலில் ஒரு முக்கியச் சேர்க்கையாக அமைந்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த சரக்கு போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்கில், மின்சார ஆட்டோக்களின் சரக்குப் போக்குவரத்தை சென்னை கோட்டம் தொடங்கியது.
‘மான்ட்ரா எலக்ட்ரிக்’ ஆட்டோக்கள் தடாவில் இருந்து ரங்காபானிக்கும், ‘மஹிந்திரா எலக்ட்ரிக்’ ஆட்டோக்கள் ஜோலார்பேட்டையில் இருந்து வடகிழக்கு எல்லை ரயில்வேயின் (NFR) கீழ் உள்ள சால்சாப்ரா மற்றும் ஜிரானியா நிலையங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டன.
சரக்குப் போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக, பொன்னேரி அருகே உள்ள அனுப்பம்பட்டு கிராமத்தில் சென்னை கோட்டத்தின் இரண்டாவது ‘கதி சக்தி மல்டி மாடல் சரக்கு முனையம்’ பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த முனையத்திலிருந்து, 45 பி.எல்.சி.ஏ. வேகன்கள் கொண்ட முதல் சரக்கு ரயில் பொன்னேரியிலிருந்து தென்கிழக்கு ரயில்வேயின் சக்ரதர்பூர் கோட்டத்தில் உள்ள மகாவீர் ஃபெரோ அலாய்ஸ் நிறுவனத்தின் தனியார் சரக்கு முனையத்துக்கு 1,389 கி.மீ தூரத்தைக் கடந்து சென்றது.
இவை அனைத்தும் சரக்கு போக்குவரத்துத் திறனை மேம்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டுள்ளன. இத்தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.