சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் 2026 ஏப். முதல் செப்.வரை 6 மாதங்களில் சரக்கு போக்குவரத்தால், ரூ.618.51 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
சுமார் 5.413 மில்லியன் டன் எடையுள்ள அத்தியாவசியப் பொருட்கள், மின் உற்பத்தித் தேவைக்கான பொருட்கள், கனரக தொழில்துறை சரக்குகள் நாடு முழுவதும் வெற்றிகரமாக கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன.
அனல் மின் நிலையங்களின் எரிபொருள் தேவைக்காக 3.517 மில்லியன் டன் நிலக்கரி கொண்டு செல்லப்பட்டதன் மூலம் அதிகபட்சமாக ரூ.346.42 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
இது மொத்த சரக்கு வருவாயில் 56 சதவீதம் ஆகும். ஹூண்டாய், ரெனால்ட் நிசான், ஓலா, டிவிஎஸ் போன்ற முன்னணி நிறுவனங்களின் மோட்டார் வாகனங்கள் மற்றும் தொழில்துறை உபகரணங்கள் (370 சரக்கு ரயில்கள் மூலம்) கையாளப்பட்டதில் ரூ.122.64 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. (இதில் வாகனங்கள் மூலம் மட்டும் ரூ.90.62 கோடி கிடைத்துள்ளது.
உள்நாடு, ஏற்றுமதி-இறக்குமதி கன்டெய்னர்களால் ரூ.76.76 கோடி வருவாயும், பெட்ரோலியப் பொருட்களால் ரூ.37.03 கோடி, உரங்களால் ரூ.22.90 கோடி உணவு தானியங்களால் ரூ.6.32கோடி வருவாயும் ஈட்டப்பட்டுள்ளன.
பிராந்திய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் நம்பகமான சரக்குப் போக்குவரத்து சேவைகளை வழங்க சென்னை கோட்டம் உறுதியுடன் செயல்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.