சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வருவாய் 2024–25-ம் நிதியாண்டில், கட்டணம் தவிர்த்து இதர பிரிவுகளில் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தினமும் பயணம் செய்கின்றனர். மெட்ரோ ரயில் நிறுவனம் டிக்கெட் கட்டண வருவாய் மட்டுமின்றி, இதர வழிகளிலும் வருவாயை திரட்டும் பணிகளை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, வாகன நிறுத்தும் இடம் அதிகரிப்பு, மெட்ரோவுக்கு சொந்தமான இடங்களை தனியாருக்கு நீண்ட காலத்துக்கு குத்தகை விடுவது, ரயில்கள், ரயில் நிலையங்களில் தனியார் விளம்பரம் செய்ய அனுமதிப்பது உட்பட பல்வேறு வகைகளில் வருவாயை ஈட்டுகிறது.
இதனால் அந்நிறுவனத்தின் வருவாய் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 2024-25-ம் நிதியாண்டின் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.369.49 கோடியிலிருந்து ரூ.425.64 கோடி ஆக உயர்ந்துள்ளது.
இது 15 சதவீதம் அதிகமாகும். பயணக் கட்டண வருவாய் மட்டுமின்றி, இதர பிரிவுகளில் வருவாய் அதிகரித்துள்ளது. இதர பிரிவு வருவாய் ரூ.104.30 கோடியிலிருந்து ரூ.135.39 கோடியாக அதிகரித்துள்ளது. இது 30 சதவீதம் அதிகமாகும்.
வரும் ஆண்டுகளில் பயணிகள் எண்ணிக்கையும், இதர பிரிவுகளில் பயன்பாடுகளும் அதிகரிக்கும் என்பதால், வருவாய் மேலும் அதிகரிக்கும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.