தமிழகம்

ஜாமீன் மறுக்கப்பட்டவருக்கு மறுநாளே வழங்கியது எப்படி? - திருவொற்றியூர் குற்றவியல் நடுவர் விளக்கமளிக்க உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: மாணவியின் பாலியல் வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றிய விவகாரத்தில் கைதான நண்பருக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் மறுநாளே ஜாமீன் வழங்கியது எப்படி என்பது குறித்து திருவொற்றியூர் குற்றவியல் நடுவர் விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவொற்றியூர் பகுதியில் 18 வயதான கல்லூரி மாணவியிடம் அவரது நண்பர் பாலியல் உறவு கொண்டுள்ளார். இதை அந்த நண்பரின் தோழியும், மற்றொரு நண்பரும் சேர்ந்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர்.

இதுதொடர்பாக மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் திருவொற்றியூர் போலீஸார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நண்பரை கடந்த ஜூன் மாதம் 2-ம் தேதி கைது செய்தனர். அவரது ஜாமீன் மனுவை திருவொற்றியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் கடந்த ஜூன் 4-ம் தேதியன்று தள்ளுபடி செய்தது.

அன்றைய தினமே மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை ஏற்று ஜூன் 5-ம் தேதியன்று அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும் ஜாமீன் வழங்கியது தொடர்பான உத்தரவு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கும் அனுப்பி வைக்கப்படவில்லை.

இந்நிலையில் தனது மகளின் பாலியல் வீடியோ 40-க்கும் மேற்பட்ட ஆபாச இணையதளங்களில் பரவி விட்டதால் அதை உடனடியாக தடுத்து தனது மகளின் வாழ்க்கையை பாதுகாக்க வேண்டும் என்றும், மகளின் வாழ்க்கையை சீரழித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பாக நடந்தது. அப்போது காவல்துறை தரப்பில் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ 25 இணையதளங்களில் இருந்து நீக்கப்பட்டு விட்டது என்றும், 17 இணையதளங்களில் இருந்து நீக்க முடியவில்லை என்றும், இருப்பினும் அவற்றை நீக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

முடக்க உத்தரவு: அதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, எஞ்சிய 17 இணையதளங்களில் இருந்து அந்த வீடியோவை வரும் அக்.5-ம் தேதிக்குள் நீக்க வேண்டும் என்றும், ஒருவேளை நீக்க முடியாவிட்டால் அந்த இணையதளங்களை ஒட்டுமொத்தமாக முடக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.

அதேபோல இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட நபருக்கு முதல்நாள் ஜாமீன் மறுத்த நிலையில் மறுநாளே அவசர அவசரமாக ஜாமீன் வழங்கியது எப்படி என்பது குறித்தும், ஜாமீன் ஜாமீன் மனுவை விசாரிக்கும் முன்பாக குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு முன்பாக எதிர்தரப்புக்கு நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும் என்ற சட்ட விதியை ஏன் பின்பற்றவில்லை என்றும், ஜாமீன் வழங்கியதற்கான உத்தரவை 4 மாதங்களாக இணையத்தில் பதிவேற்றம் செய்யாதது ஏன் என்பது குறித்தும் திருவொற்றியூர் குற்றவியல் நடுவர் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை அக்.5-க்கு தள்ளி வைத்துள்ளார்.

SCROLL FOR NEXT