தமிழகம்

திருத்தப்பட்ட விதியின் அடிப்படையில் துணை வட்டாட்சியர் பதவி உயர்வு: சென்னை ஐகோர்ட் உத்தரவும், விளக்கமும்

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தமிழகம் முழுவதும் வருவாய் துறையில் உள்ள தகுதியான ஊழியர்களுக்கு திருத்தப்பட்ட விதியின் அடிப்படையில் துணை வட்டாட்சியர் பதவி உயர்வு வழங்கலாம் என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அந்தப் பதவி உயர்வுகள் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனத் தெளிவுபடுத்தியுள்ளது.

தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள துணை வட்டாட்சியர் பதவி உயர்வு தொடர்பாக, தமிழ்நாடு வருவாய் சார்புப் பணி விதிகளில் செய்யப்பட்ட திருத்தத்தை எதிர்த்து ஆர்.திருமலை, எஸ்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், தங்களது பணிமூப்புக்கு எதிராக அரசு தலையிடுவதைத் தடுக்கும் வகையில் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கிருஷ்ணசாமி கோவிந்தராஜன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது தமிழக அரசின் தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிடுகையில், ‘பிரதான வழக்குகளில் தற்போதைய நிலையைத் தொடர வேண்டும் என்ற இடைக்கால உத்தரவால், வருவாய்த் துறையில் உள்ள துணை வட்டாட்சியர் பதவிக்கு, பதவி உயர்வு வழங்குவதில் நிர்வாகச் சிக்கல்களை ஏற்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டார்.

மேலும், ‘வருவாய்த் துறையில் துணை வட்டாட்சியர் பதவி ஒரு முக்கியமான பதவியாகும் என்பதல அவற்றை, காலியாக வைத்திருப்பது தமிழ்நாட்டின் வருவாய் நிர்வாகத்தைப் பாதிக்கும்’ எனவும் வாதிட்டார்.

மனுதாரர்களான வருவாய் துறை ஊழியர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை 2024-ம் ஆண்டு பிப்ரவரி 27-ல் பிறப்பித்த அரசாணை 65-ல் பின்தேதியிட்ட உத்தரவால், வருவாய்த் துறை ஊழியர்கள் பின்னோக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பழைய நிலைக்கு அனுப்பப்பட்டால் ஊழியர்களின் பணிக்கால பலன்கள் பாதிக்கப்படும். பதவி இறக்கம் என்பது வட்டாட்சியர் பதவிக்கான, பதவி உயர்வின் எதிர்கால வாய்ப்புகளைப் பாதிக்கும்’ என்று விளக்கம் அளித்தனர்.

பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், “அரசாணையில் திருத்தப்பட்ட விதிகள் வெளியிடப்படுவதற்கு முன்னர் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வுகளைப் பாதுகாப்பதற்கும், வருவாய் நிர்வாகம் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கும், சமநிலையான அணுகுமுறையை நீதிமன்றம் கையாள வேண்டியது அவசியம்.

அதன்படி, திருத்தப்பட்ட விதிகளை வெளியிடுவதற்கு முன்னர் துணை வட்டாட்சியர்களாக ஏற்கெனவே பதவி உயர்வு பெற்ற உதவியாளர்கள், கீழ்நிலைப் பதவிக்குத் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள். திருத்தப்பட்ட விதியின் அடிப்படையில் தகுதியுள்ள ஊழியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கலாம். ஆனால், அவை இந்த வழக்குகளின் இறுதி முடிவுக்கு உட்பட்டது என பதவி உயர்வு உத்தரவில் குறிப்பிட வேண்டும்’ என்று கூறி, இடைக்கால மனுக்களை முடித்துவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், பிரதான வழக்குகள் மீதான விசாரணயையும் இரண்டு வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT