தமிழகம்

ஜெம் வீரமணி மகள் அர்ச்சனா மனு மீது சிறப்பு புலனாய்வுக் குழு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: வெளிநாடு செல்லவிருந்த தன்னை விமானத்தில் இருந்து இறக்கிவிட்டதுடன், சிறப்பு புலனாய்வுக் குழு அலுவலகத்தில் தனக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கக் கோரி வீரமணியின் மகள் அர்ச்சனா தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த அக்டோபர் 23-ம் தேதி சிங்கப்பூரில் உள்ள தனது மகனை காண விமானத்தில் பயணிக்க இருந்த வீரமணியின் மகள் அர்ச்சனாவை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில், எந்தவொரு காரணமும் கூறாமல் விமானப் பணியாளர்கள் தன்னை விமானத்தில் இருந்து இறக்கிவிட்டதாகவும், அதன் பிறகு சிறப்பு புலனாய்வுக் குழு அலுவலகத்தில் தனக்கு ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி வீரமணியின் மகள் அர்ச்சனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், எந்தவொரு சம்மனும், நீதிமன்ற வாரன்ட்டும், லுக் அவுட் நோட்டீஸும் இல்லாமல் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தன்னை அழைத்துச் சென்றதாகவும், கடந்த 20 ஆண்டுகளாக உடல்நலக் குறைவுகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அலுவலகத்தில் மயங்கி விழுந்துவிட்டதாகவும், பிறகு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அக்டோபர் 25-ம் தேதி ஆஜராகும்படி சிறப்பு புலனாய்வுக் குழுவினர் சம்மன் அனுப்பியுள்ளனர். அந்த சம்மனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். விசாரணையின்போது, என்னிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட லேப் டாப் உள்ளிட்ட ஆவணங்களை திரும்பத் தர உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ‘வழக்கில் குற்றம்சாட்டப்படாத அர்ச்சனாவை, விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று கழிவறையைக் கூட பயன்படுத்த அனுமதிக்காமல், நீண்ட நேரம் காத்திருக்க வைத்திருந்ததால், அவர் சிறப்பு புலனாய்வுக் குழு அலுவலகத்திலேயே மயங்கி விழுந்தார். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ எனவும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

காவல்துறை தரப்பில், ‘விசாரணைக்கு சம்மன் கொடுக்க மனுதாரர் வீட்டுக்குச் சென்றபோது, அவர் இல்லாத காரணத்தால், வீட்டுக் காவலாளியிடம் சம்மன் கொடுக்கப்பட்டது. சம்மனை மனுதாரரின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு போலீஸார் அனுப்பினர். அதன் பிறகு மனுதாரரின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்து விட்டார்.

மனுதாரர் இந்தியாவை விட்டு வெளியேறுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து விமான நிலையத்துக்குச் சென்று விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார். விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. இது தொடர்பாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும்’ என கேட்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி, இந்த மனுவுக்கு சிறப்பு புலனாய்வுக் குழு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT