சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் தர லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சரணடைந்த சரவணனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் தர லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், அரசக்குமார், முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார், சரவணன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6-வது நபராக சேர்க்கப்பட்டுள்ள சரவணன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். சரவணன் தலைமறைவாக உள்ளதால் அன்பில் மகேஸுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என காவல் துறை எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த சரவணன் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து, சரவணனை நவம்பர் 25-ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி உத்தரவிட்டார்.