சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்காக ரூ.13 லட்சம் லஞ்சம் கொடுத்தவர் மற்றும் தரகராக செயல்பட்டவர் மீது அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர் கடந்த 2009-ம் ஆண்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நிறுவனங்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் தனது மகனுக்கு சேர்க்கை பெற்றுத் தருமாறு அண்ணா நகர் அன்வர் உசைன் மூலமாக மேற்கு மாம்பலம் ரவீந்திரபாபுவிடம் ரூ.13 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக சிபிஐ போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
சென்னை சிபிஐ நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து, சேகர், அன்வர் உசைனுக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து இருவரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சிறை தண்டனையை ரத்து செய்தது.
இதற்கிடையே,சிபிஜ பதிவு செய்த மூல வழக்கின் அடிப்படையில் கடந்த 2012-ம் ஆண்டு அமலாக்கத் துறை தனியாக வழக்கு பதிவு செய்தது. இதை விசாரித்த அமலாக்கத் துறை சிறப்பு நீதிமன்றம். இரு வருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்தும் அவர்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன், “சிபிஐ வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனை உயர் நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்ட போதிலும், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது. ஒருவேளை, அதில் தண்டனை உறுதி செய்யப்பட்டால் அமலாக்கத் துறை இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க அனும்திக்க வேண்டும்” என்று கோரினார்.
தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.மணிசங்கர் ஆஜராகி, “மூல வழக்கில் விதித்த சிறை தண்டனை ரத்து செய்யப்பட் டுள்ளதால், அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கின் தீர்ப்பையும் ரத்து செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.
இதையடுத்து, நீதிபதிகள் தமது உத்தரவில் கூறியதாவது, “சிபிஐ வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டு விட்டதால், அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட சிறை தண்டனையையும் ரத்து செய்வதில் தவறு இல்லை.
எனவே, அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு லஞ்சம் கொடுத்ததாக சேகர், அன்வர் உசைனுக்கு அமலாக்கத் துறை வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்கிறோம். ஒரு வேளை, சிபிஐ மேல்முறையீட்டு வழக்கில் கீழமை நீதிமன்றத் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டால் அமலாக்கத் துறை சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை.” இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.