சென்னை: சென்னை கோயம்பேடு மற்றும் மண்ணடி ஆகிய பகுதிகளில் தொழிலாளர் துறை மற்றும் குழந்தைத் தொழிலாளர் தடுப்புப் படையினர் நடத்திய அதிரடி ஆய்வில் இரு சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் அறிவுறுத்தலின்படி, குழந்தைத் தொழிலாளர் தடுப்புப் படைக்குழுவினர் நகரின் முக்கியப் பகுதிகளில் தீவிர ஆய்வு மேற்கொண்டு சிறார்களை மீட்டுள்ளனர். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடத்திய ஆய்வில், அங்குப் பணியில் ஈடுபட்டிருந்த 15 வயது சிறுவன் மீட்கப்பட்டார்.
இதேபோல் மண்ணடி போலீஸ் காலனி, மெட்ரோ வளாகத்தில் உள்ள டீக்கடை ஒன்றில் பணியில் இருந்த 15 வயது சிறுவன் மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் குறித்தும் காவல் நிலையத்தில் சி.எஸ்.ஆர் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் சென்னை குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் கூறுகையில், “15 முதல் 18 வயது வரையிலான வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்தக்கூடாது. இந்த சட்டத்தை மீறி குழந்தைகளை பணியில் அமர்த்தினால் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும்” என்றார்.