தமிழகம்

கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தட மின்சார ரயில் இயக்கத்தில் புதிய கால அட்டவணை

ஜூன் 1 முதல் அமல்

செய்திப்பிரிவு

சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் மின்சார ரயில்கள் இயக்கத்தில் புதிய கால அட்டவணை நாளை (ஜூன் 1) முதல் அமல்படுத்தப்படுகிறது.

சென்னை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் புதிய கால அட்டவணை ஜூன் 1ம் தேதி (நாளை) முதல் அமல்படுத்தப்பட உள்ளது. தற்போது இயக்கப்படும் 212 மின்சார ரயில்களின் சேவை அப்படியே தொடரும். ஆனால், ரயில்களின் இயக்கும் நேரத்தில் மட்டும் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: சென்னை - தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் வழித்தடத்தில், புதிய கால அட்ட வணைப்படி, அலுவலக நாட்களில் 212 மின்சார ரயில்களும், விடுமுறை நாட்களில் 190-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் இயக்கப்படும். இயக்ககக் காரணம் மற்றும் எழும்பூர் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணி ஆகியவை காரணமாக, இந்த புதிய கால அட்டவணை அமல்படுத்தப்பட உள்ளது.

மேலும், பயணிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, நெரிசல் மிகுந்த நேரங்களில் (பீக் அவர்ஸ்) இடைவெளி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மற்ற நேரங்களில் 15 நிமிட இடைவெளியில் இயக்கும் வகையில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, புறநகர் மின்சார ரயில் பயணிகள் கூறும் போது, "செங்கல்பட்டு- தாம்பரம்- கிண்டி- கடற்கரை வரை காலை வேளையில் அதாவது பீக் அவர்ஸில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், போதிய மின்சார ரயில் சேவை கிடைக்காமல், பணிக்கு செல்லும் பயணிகள் பாதிக்கப்படு வார்கள். சென்னை புறநகரில் மின்சார ரயில்களின் தேவை பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த அட்டவணையில் கூடுதல் ரயில்கள் இல்லாதது, ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது" என்றனர்.

SCROLL FOR NEXT