தமிழகம்

சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் 40+ ரயில் சேவை ரத்து: நான்காவது நாளாக பயணிகள் அவதி

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில், 40-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவை ரத்து மற்றும் சேவை மாற்றத்தால், பயணிகள் 4-வது நாளாக இன்று கடும் சிரத்தை சந்தித்தனர்.

எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியின் ஒரு பகுதியாக, 10, 11 ஆகிய நடைமேடைகளில் நடைமேம்பால அடித்தளப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் பிப்.20-ம் தேதி முதல் ஏப்.5-ம் தேதி வரை 44 மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், இம்மார்க்கத்தில் இதர மின்சார ரயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளன.

          

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு நோக்கி இயக்கப்படும் மின்சார ரயில்கள், எழும்பூர் ரயில் நிலைய 5-வது நடைமேடை வழியாகவும், செங்கல்பட்டு, தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி இயக்கப்படும் மின்சார ரயில்கள் எழும்பூர் ரயில் நிலைய 6-வது நடைமேடை வழியாகவும் இயக்கப்படுகின்றன.

இவ்வாறு நடைமேடைகள் மாற்றப்பட்டதால், தண்டவாளங்களைப் கடப்பது மற்றும் சிக்னல் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இரு மார்க்கத்திலும் மின்சார ரயில்கள் தாமதமாகின்றன. இதன் காரணமாக, ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் பயணிகள் 45 நிமிடங்கள் வரை காத்திருக்கின்றனர். கடந்த 3 நாட்களாகவே பயணிகள் சிரமப்பட்டனர்.

இந்நிலையில், இன்று 4-வது நாளாக தாமதத்தால் ரயில் பயணிகள் அவதிப்பட்டனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பொத்தேரி, காட்டாங்குளத்தூர், கூடுவாஞ்சேரி உள்பட பல்வேறு இடங்களில் இருந்து நேற்று காலை சென்னைக்கு வந்த பயணிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர்.

SCROLL FOR NEXT