கோப்புப் படம் 

 
தமிழகம்

சிட்கோ நில ஆக்கிரமிப்பு வழக்கு: மா.சுப்பிரமணியன் மீது குற்றச்சாட்டு பதிந்து நீதிமன்றம் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை போலியான ஆவணங்களை பயன்படுத்தி அபகரித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் அவரின் மனைவிக்கு எதிராக குற்றச்சாட்டை பதிவு செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை, திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை மாநகர மேயராக இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றம் செய்துள்ளதாக சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மா.சுப்ரமணியன் மீது மோசடி, கூட்டுச் சதி, ஊழல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட சட்ட பிரிவுகளில் கீழ் சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சென்னையில் உள்ள சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைப்பெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு தள்ளிவைக்கபட்டது. இதனை எதிர்த்து மா.சுப்பிரமணியம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரின் மனுவை கடந்த ஆண்டு மே மாதம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து குற்றச்சாட்டு பதிவு செய்யாமல் விசாரணை தள்ளவைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.சஞ்சய் பாபா முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரின் மனைவி காஞ்சனா ஆகியோர் நேரில் ஆஜராகி இருந்தனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசித்து கூறினார்.

இதற்கு பதில் அளித்த மா.சுப்பிரமணியம் மற்றும் அவரின் மனைவி, தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், இது முற்றிலும் தவறு எனவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து இருவர் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்த நீதிபதி, வழக்கின் சாட்சி விசாரணை ஆகஸ்ட் 31- ஆம் தேதிக்கு நடைபெறும் என்று, வழக்கு விசாரணை அன்றைய தினத்துக்கு தள்ளிவைப்பதாக உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT