படம்: வேளாங்கண்ணி ராஜ்

 
தமிழகம்

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் டிச.11 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

ச.கார்த்திகேயன்

சென்னை: தமிழகத்தில் நாளை (டிச.6) முதல் டிச.11-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக நாளை (டிச.6) முதல் டிச.11-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை: தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் டிச.9-ம் தேதி வரை மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை. தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் 9 செமீ, சென்னை ஒக்கியம் துரைபாக்கம், செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் தலா 7 செமீ,

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர், சென்னை புழலில் தலா 6 செமீ, சென்னை உத்தண்டி, திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் தலா 5 செமீ, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, செங்குன்றம், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலபந்தல், கடலூர் மாவட்டம் பெலாந்துறையில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT