சென்னை: மதுரை, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: தென்மேற்குப் பருவமழை கேரளப் பகுதிகளில் 26-ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சியும், வடகிழக்கு தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சியும் நிலவுகின்றன.
இது மட்டுமின்றி, மகாராஷ்டிராவின் மேற்கு விதர்பா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியில் இருந்து உள் கர்நாடகா, தமிழகம் வழியாக மன்னார் வளைகுடா வரை ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதையும் நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், நாளை கோவை, திருப்பூர் மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.
அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 2-3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 28 டிகிரி முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.