முதல்வர் ஸ்டாலின்
சென்னை: கீழடி உள்பட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் கீழடி, தூத்துக்குடி மாவட்டம் பட்டணமருதூர், தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர், கடலூர் மாவட்டம் மணிக்கொல்லை, விழுப்புரம் மாவட்டம் ஆதிச்சனூர், கோவை மாவட்டம் வெள்ளலூர், சேலம் மாவட்டம் தெலுங்கனூர் -மாங்காடு மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள அனுமதி வழங்கக்கோரி மத்திய அரசின் இந்திய தொல்லியல் ஆய்வகத்துக்கு (ஏஎஸ்ஐ), தமிழக அரசின் தொல்லியல் துறை கடந்த ஆண்டு ஜூலை மாதம் விண்ணப்பித்திருந்தது.
தொடர்ந்து வலியுறுத்தல்: நீண்டகாலம் ஆகியும் ஏஎஸ்ஐ அனுமதி கிடைக்காத நிலையில் தமிழக அரசின் தொல்லியல் துறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியது. மேலும், அகழ்வாராய்ச்சி பணிக்கு விரைந்து அனுமதி வழங்குமாறு மத்திய அரசை முதல்வர் ஸ்டாலினும் அண்மையில் வலியுறுத்தி யிருந்தார்.
இந்நிலையில், கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள இந்திய தொல்லியல் ஆய்வகம் அனுமதி வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்டபதிவில் கூறியிருப்பதாவது:
விடாமுயற்சிக்கு வெற்றி: தொடர் அழுத்தத்தாலும், கடிதங்களாலும் கீழடிஉள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற் கான மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளோம்.
பல மாதங்கள் தாமதத்துக்குப் பின்பு, நமது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது. அடுத்து, மத்திய பாஜக அரசு வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கும் கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.