சென்னை: தொடர் வேலைநிறுத்த போராட்ட முடிவை வங்கி ஊழியர்கள் கைவிட வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பொதுத்துறை வங்கி தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த அமைப்பு மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகளின் தொழிற்சங்கங்கள் இணைந்து, இரண்டு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தப் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தன.
வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கிச் செயல்பாடுகளை மேற்கொள்ளுதல், செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தை திரும்பப் பெறுதல் ஆகிய கோரிக்கைகளை சங்கங்கள் முன்வைக்கின்றன.
விரிவான ஆலோசனைக்குப் பிறகு, பிஎல்ஐ திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசு பல கட்ட சமரசப் பேச்சுவார்த்தைகளை நடத்தியது.