சென்னை: மக்கள்தொகை கணக்கெடுப்பின் வீடுகள் பட்டியல், வீட்டின் வசதிகள் கணக்கெடுப்பு களப்பணி தொடங்கியது.
இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 16 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடைபெற்று வருகிறது. வீடுகள் பட்டியல், வீட்டின் வசதி கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு என்று இந்த பணி 2 கட்டங்களாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. மக்கள் நேரடியாக தங்கள் சுய விவரங்களை பதிவேற்றம் செய்யும் வகையில் சுய கணக்கெடுப்பு பணி கடந்த 17-ம் தேதி தொடங்கி 31-ம் தேதியுடன் நிறைவு பெற்றது.
இதன்மூலம் தமிழகத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இணையதளம் வழியாக தங்கள் விவரங்களை சமர்ப்பித்தனர். இந்நிலையில், வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டின் வசதிகள் கணக்கெடுப்பின் களப்பணிகள் நேற்று தொடங்கின. தமிழகம் முழுவதும் இப்பணி இம்மாதம் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 1.15 லட்சம் பேர் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.
அவர்கள் வீடு வீடாக வந்து கணக்கெடுப்பை நடத்துவார்கள். 33 கேள்விகள் கொண்ட ஒரு கட்டமைக்கப்பட்ட கேள்வித் தாளை கொண்டு, இப்பணி மேற்கொள்ளப்படும். வீடுகளின் நிலை, குடிநீர் வசதி, சுகாதாரம், மின்சாரம், இணைய வசதி, சமையல் எரி பொருள் வசதி, கழிவறை வசதி, வாகனங்கள் போன்ற முக்கிய தரவுகள் சேகரிக்கப்படும்.
இதுகுறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு தமிழக இயக்குநர் சுந்தரேஷ் பாபு கூறியதாவது: முதல்முறையாக முழுவதும் நவீன டிஜிட்டல் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பிரத்யேக மொபைல் செயலியை கணக்கெடுப்பாளர்கள் பயன்படுத்துவார்கள். தரவுத்தளத்தில் தகவல்கள் பத்திரமாக, ரகசியமாக சேமிக்கப்படும். 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்களை கண்காணிக்க 19 ஆயிரம் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டத்தின்படி, உண்மையான, முழுமையான தகவல்களை மக்கள் வழங்க வேண்டும். இப்பணிக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.