சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா அறையில் ‘ஜனநாயகன்’ படம் பார்த்த ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், வேளச்சேரி, தி.நகர், மைலாப்பூர் ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, 24 மணி நேரமும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக தரமணியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியை மேற்கொண்டது. இந்நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக உள்ள திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த யுவராஜ் (31) என்பவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள அறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இவர், பணியில் இருந்த போது தனது லேப்டாப்பில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தை சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்து பார்த்ததுடன் அதனை படம் எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது வைரலானது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி தகவல் தொழில்நுட்ப அதிகாரி சைலேந்தர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து யுவராஜை கைது செய்தனர். ஜனநாயகன் திரைப்படத்தை சட்ட விரோதமாக பதிவிறக்கம் செய்ததோடு அதை வாக்கு எண்ணும் மையத்தில் வைத்தே பார்த்துள்ளார். அதோடு அப்படி பார்த்ததை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளார். முன்னதாக இவர், தேர்தல் ஆணையம் வழங்கிய தற்காலிக அடையாள அட்டையையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்காக யுவராஜை கைது செய்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.